மகாஜனம் என்னும் இதழ் நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் மதுரையிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த இதழில் (23.9. 2010 ) அச்சம் அகற்றிய அண்ணல் என்ற தலைப்போடு சுய மரியாதை இயக்கத்தின் தலைவர் மறைந்த ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன் அவர்களின் உருவம் தாங்கி வெளிவருகிறது.
உள்ளே சிறப்புக் கட் டுரை ஒன்று பாண்டியனார் என்ற மாமனிதர் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்துக்கு, தான் தலைமை தாங்காமல் ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன் அவர்களைத் தலைவராகக் கொண்டு, இரண்டு துணைத் தலைவர்களுள் ஒருவராகத் தந்தை பெரியார் தம்மை ஆக்கிக் கொண்டார் என்பது - நமது பொது வாழ்வில் காண முடியாத அரிய காட்சியாகும்.
செங்கற்பட்டு மாநாட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டுக்கு பாண்டியனார் அவர்களைத் தலைமை தாங்குமாறு முன்மொழிந்து தந்தை பெரியார் அவர்கள், பாண்டியனார் பற்றி கூறிய சொற்கள் அசாதாரணமானவை.
நம்முடைய மகாநாட்டுக்குத் தலைவராக இருக்கிற திரு. நாடார் அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அதிகமாக எடுத்துச் சொல்ல முன்வருவது, பகலில் சூரியனைக் காட்டு வதற்குத் தீவட்டி பிடித்தது போலாகும் - என்று குறிப்பிடுகிறார் என்றால், அந்தப் பெருமகனாரின் பெருமையை என்னவென்று சொல்லுவது!
அம் மாநாட்டில் தலைமை வகிக்கும்போது, பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ஜாதிப் பெயரை - மாநாட்டை விட்டு வெளியேறும் போது தூக்கி எறிந்த பெருமை அவரைச்சாரும்.
அவர் மாவட்ட ஆட்சிக் கழகத் தலைவராக இருந்த போதுதான் தாழ்த்தப்பட்ட வர்களை அனுமதிக்காத பேருந்துகளின் உரிமத்தைப் பறிமுதல் செய்யும் ஆணையைப் பிறப்பித்து, நடைமுறையும் படுத்தினார்.
அத்தகு கொள்கைத் தங்கம் பற்றி மகாஜனம் ஏடு எழுதுகிறது:
நீதிக்கட்சி, சுயமரி யாதை இயக்கம் முதலிய அரசியல் சார்புடைய அமைப்புகளில் பங்கேற்று நாடு போற்றும் நாயகரானார். 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார் என்று குறிப்பிட்டு விட்டு, இவை அனைத்தையும் விட நாம் இவரை ஒரு மாபெரும் தலைவராகக் கொண்டாடுகிறோம் என்றால், நாடார் இனமக்களுக்குப் பாதுகாவலராக இருந்த காரணத்தால்தான் என்று மகாஜனம் எழுதுகிறதே; என்ன சொல்ல?
நாட்டுக்குத் தொண்டாற்றிய நல் முத்துகளை ஜாதிக் கூண்டுக்குள் அடைப்பது அவருக்குப் பெருமை சேர்ப்பதாகுமா?
கட்டுரையின் கடைசி வரி என்ன தெரியுமா?
அன்னாரின் வழியில் நம்மவர்கள் அனைவரும் நடப்போம்! வெற்றி பெறுவோம்! என்று முடிக்கப்பட்டுள்ளது - சரிதான் - அதே இதழில் நவராத்திரிப் பெருமை பேசப்படுகிறதே - இதுதான் பாண்டியனார் காட்டிய வழியா?
9.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக