வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ரசல்





உலக நாத்திக அறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (18.5.1872).

உயர் எண்ணங்களை - சிந்தனை வித்துகளை உலகிற்கு வாரி வழங்கியவர். அவருடைய கருத்துகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவை காலத்தை வென்று நிற்கக் கூடிய ஒளி முத்துகள்!

பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனத்தின் சார்பில் உட்ரோ உவையட் என்பவர் ரசலிடம் கண்ட பேட்டி 13 தொகுப்புகளாக வெளி வந்துள்ளன.

உவையட்: ஒரு நம்பிக்கையை அல்லது மதத்தைப் பின்பற்றவேண்டும்; இன்றேல் வாழ்க்கையை எதிர் நோக்க முடியாது என்று கூறும் மக்கள் என்ன ஆவது?

ரசலின் பதில்: ஒரு வகையான கோழைத்தனத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாக உணரும் மக்கள் வேறு எந்தத் துறையிலும் வெறுக்கத் தக்கவர்களாகவே கருதப்படுவார்கள். ஆனால், மதத்துறையில் காணப்படும்போது, அது பாராட்டத்தக்கதாக நினைக்கப்படுகிறது. கோழைத் தனம் எந்தத் துறையில் காணப்பட்டாலும் நான் அதைப் பாராட்ட முடியாது.

உவையட்: ஆனால், நீங்கள் அதைக் கோழைத் தனம் என்று கூறுகிறீர்கள்!

ரசலின் பதில்: இது இல்லாமல் அது இல்லாமல் வாழ்க்கையை எதிர்த்து நிற்க முடியாது என்று கூறுவதற்காக சொல்கிறேன். வாழ்க்கை எதை அவர்களுக்குத் தந்தாலும் ஒவ்வொருவரும் வாழ்க்கையை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.

உவையட்: அப்படியானால், மக்கள் தங்களுடைய பிரச்சினைகளைக் கடவுளின் மேலோ, பூசாரியின் மீதோ அல்லது அமைப்பாக உள்ள மதத்தின்மீதோ போட்டு விடுகிறார்கள்; அவர்களாகவே பிரச்சினைகளை சமாளிப்பதில்லை என்ற அர்த்தத்தில் அதைக் கோழைத்தனம் என்று கருதுகிறீர்களா?

ரசலின் பதில்: ஆமாம், உலகில் உள்ள மிக ஆபத்தான நிலைபற்றிய பிரச்சினையை முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆகா, கடவுள் அதைக் கவனித்துக் கொள்வார் என்று கூறும் கடிதங்கள் எனக்கு எப்பொழுதும் வருகின்றன. ஆனால், கடவுள் கடந்த காலத்தில் ஒரு போதும் அப்படிக் கவனித்துக் கொண்டதில்லையே, ஆனால், வருங்காலத்தில் கடவுள் கவனித்துக் கொள்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

இவ்வாறு பகுத்தறிவின் அடிப்படையில் தர்க்கப்போர் புரிந்த மேதைதான் ரசல்.

98 ஆண்டுகாலம் வாழ்ந்து காட்டியும் உள்ளார். கிறித்துவக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனித்த சிந்தனைகளால் அந்தச் சூழல் விலங்குகளை உடைத்தெறிந்து என்றென்றும் ஒளிவீசித் திகழும் அந்தப் பெருமகனின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் போற்றுவோம்!



18.5.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக