வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நடராசன் - தாளமுத்து


இந்த இருபெரும் வீரர்கள் வரலாறு உள்ளவரை வாழ்வார்கள். பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைப் புகுத்தும் தந்திரத்தில் இந்தியைக் கட்டாயப்பாடம் என்று அறிவித்தவர் (10.8.1937) குல்லுகப்பட்டரான - அன்றைய சென்னை மாநிலப் பிரதம அமைச்சர் சி.ஆர்.ஆச்சாரியார் (ராஜாஜி).

ஆரிய சூழ்ச்சியின் அடி நாதத்தைப் புரிந்து கொண்ட அரிமா பெரியார் போர் தொடுத்தார். தொண்டர்கள் துடித்து எழுந்தனர்.
தமிழ்நாடு - அதற்கு முன் கண்டிராத உணர்வின் எரிமலையாக வெடித்துக் கிளம்பியது.

சென்னையைச் சேர்ந்த நடராசன் என்ற தோழர் சிறையில் முதல் பலியானார் (15.1.1939).

குடந்தையைச் சேர்ந்த தாளமுத்து என்ற இளங்காளை சென்னைப் பொது மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார் (12.3.1939).
சென்னை இந்து தியாலாஜிக்கல் உயர்நிலைப் பள்ளிமுன் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மறியலில் (13.9.1938) கைது செய்யப்பட்டு, சென்னை ஜார்ஜ்டவுன் நீதிபதி மாதவராவ் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

கைதி என்றாலும் தலை தாழாச் சிங்கமாக நின்றான் அந்த மான மறவன்.

இப்படியே விட்டுவிட்டால் சொந்த ஊருக்குத் திரும்புவாயா? என்று மாஜிஸ்டிரேட் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.
கோழையா அந்தக் கொள்கைக் குன்று? நெஞ்சு நிமிர்த்தி வெடிக்குரலால் முடியாது - சிறை ஏகத் தயார்! என்று கர்ச்சித்தான்.
நான்கு மாத கடினக் காவல் தண்டனை - தீர்ப்பளித்தார் நீதிபதி - சிரித்த முகத்துடன் வெஞ்சிறை ஏகியது அந்த வீரவேங்கை.
தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று தமிழர் வெள்ளம் உச்சியிடிந்து விழுந்தது போல குரல் கொடுத்தது.

புலியென உறுமிச் சென்ற அந்தக் கட்டிளங்காளை சிறையில் நோய் வாய்ப்பட்டான். சென்னைப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுப் பலனின்றி இமைகளை இறுதியாக நிறுத்திக் கொண்டான் (12.3.1939).

பல்லாயிரக்கணக்கான தமிழின மக்களின் கொள்கை முழக்கத்தோடு அந்த மாவீரனின் இறுதி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நடராசன் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே தாளமுத்துவும் புதைக்கப்பட்டான் - இல்லை, இல்லை - விதைக்கப்பட்டான்.

முக்கிய தகவல் ஒன்று உண்டு. தாளமுத்து மறைந்த நிலையிலும் அவரின் துணைவியார் குருவம்மாள் துக்கத்தில் புரண்டு கிடக்காது, அதே இந்தி எதிர்ப்புப் போரில் குதித்துச் சிறைப்பட்டாரே! அடடே, நம் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கவில்லையா?

12.3.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக