வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சுய மரியாதை?


தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 14ஆவது சட்டப் பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வகையில் இரண்டு அணிகள் போட்டியிடுகின்றன.

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ்., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அ.இ.அ.தி.மு.க. தலைமையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி. இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு) கட்சி, தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், இந்தியக் குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இழையும் ஒற்றுமையும், கூட்டுப் பொறுப்பும், இணைப்பும் எப்படி இருக்கின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்.

தி.மு.க. அணியில் உள்ள கட்சிகள் முறையாகக் கூடிப் பிரச்சாரத் திட்டத்தை எப்படி வகுத்துச் செயல்படலாம் என்று  (16.3.2011) கூடி முடிவெடுக்கின்றன. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகூட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது. (19.3.2011)

தி.மு.க. தலைமையிலான அந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முறைப்படி ஒரே மேடையில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகின்றனர். (திருவாரூர் 23.3.2011)

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் சுற்றுப் பயணத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் ஆங்காங்கே பங்கு கொண்டு உரையாற்றுகின்றனர். இந்த இணக்கமான மெச்சத்தகுந்த பண்பாடான அணுகுமுறைகளில் ஒன்றே ஒன்றாவது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளிடையே உண்டா?

ஒரே ஒரு கணம் எண்ணிப் பார்த்தால், தேர்தலுக்குப் பிறகு எந்தக் கூட்டணி ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்படும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். இதுபற்றி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியிடமும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியிடமும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்கிறார்கள் தெரியுமா?

கூட்டுப் பிரச்சாரம் செய்ய அவகாசம் இல்லை (ஜனசக்தி 30.3.2011) என்கிறது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி.

தொகுதி உடன்பாடு முடிந்தவுடனேயே அணியின் தலைவர்கள் பிரச்சார சுற்றுப் பயணத்தைத் தொடங்கிவிட்டார்கள். ஒரே மேடையில் பிரச்சாரம் என்பது முக்கியமல்ல (தீக்கதிர் 28.3.2011).
எப்படி இருக்கிறது சமாதானம் பார்த்தீர்களா? தி.மு.க. தலைமையில் உள்ள கட்சிகளால் முடியக் கூடியது - அ.தி.மு.க. அணியில் உள்ள கட்சிகளால் ஏன் முடிவதில்லை? பதில் சொல்ல வேண்டாமா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தனக்குச் சமமாக மற்றவர்களை அமர வைக்க ஜெயலலிதா அம்மையார் ஒப்புவதில்லையே - அது தான் இதற்குள் இருக்கும் சிதம்பர இரகசியம்! புரிகிறதோ! வாழ்க சுயமரியாதை!

31.3.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக