முதலாளி என்பவன் பரம்பரை பரம்பரையாக வருபவனல்லன். இன்றைக்கு ஒருவன் முதலாளியாக இருக்கலாம்; நாளைக்கே அவன் "இன்ஸால்வென்ட்' கொடுத்து "பாப்பர்' ஆகிவிடலாம். அதுபோலவே, இன்று கஞ்சிக்குத் திண்டாடியவன் அடுத்த நாள் பெருத்த முதலாளியாக வரலாம். ஆனால், பார்ப்பான் என்பது அவன் உயர் சாதிக்காரன், கடவுளுக்கு நேராகத் "தந்தி' சொல்கிறவன் என்பது பரம்பரை பரம்பரையாக - வாழையடி வாழையாக வருவது ஆகும். அழுக்குப் பிடித்த பார்ப்பான் ஆனாலும், குஷ்டம் பிடித்து அழுகிய பார்ப்பான் ஆனாலும், அயோக்கியப் பார்ப்பான் ஆனாலும் பார்ப்பார சாதியிலே பிறந்து விட்டதால், அவன் உயர்ந்த சாதிக்காரன் ஆகிவிடுகிறான். அவன் மற்றவர்களால் மரியாதை செய்யப்பட வேண்டியவனாகி விடுகிறான்.
அதேபோல, எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், திறமைசாலியாய் இருந்தாலும், ஒரு சாதியில் பிறந்ததாலேயே அவன் பறையன், சூத்திரன், தேவடியான் மகனாகக் கருதப்பட்டு, மேல்சாதிக்காரர்களுக்கு கை கட்டிச் சேவகம் செய்து வாழ வேண்டியவளாகக் கருதப்படுகிறான். முதலாளியாவது, நிலப் பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவைகளை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கை முதலே இல்லாம கடவுளைக் காட்டி,மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல்சாதிக்காரனாக உழைக்காமல் உண்டு கொழுப்பவனாக வாழ்கிறான்.
இந்த விசித்திரமான நிலைமை பாழாய்ப்போன இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லை. உள்ளபடியே சொல்லுகிறேன் இன்று ஏன் நாம் தொழிலாளர் மக்களாய் இருக்கிறோம்? சாதி அமைப்பின் காரணமாகத்தானே!
(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக