வியாழன், 3 ஆகஸ்ட், 2017

நட்ட ஈடு!


திருப்பூர்- பாளையன்காடு எனும் பகுதியில் வசித்து வரும் இணையர் விஜய்-சத்யா. 2008 டிசம்பரில் விஜயா கருத்தரித்தார்.

குழந்தை எந்தவிதக் குறையுமின்றி நல்ல நிலையில் பிறக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டனர் - அன்றாடம் வழிபட்டனர்.

அத்தோடு பாளையன்காடு மனோ மய்யத்தில் பரிசோதித்துக் (ஸ்கேன்) கொள்ளவும்பட்டது. கருவில் எந்தவிதக் குறைபாடும் இல்லை. கருவில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்று மருத்துவர் கூறினார்.

2009 செப்டம்பர் 13இல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையும் பிறந்தது. மகிழ்ச்சியோடு குழந்தையைப் பார்த்த தாய்க்கு அதிர்ச்சி காத்திருந்தது! வலது கை முற்றிலும் இல்லாத குழந்தையாக அது இருந்தது கண்டு தாய் மட்டு மல்லாமல், உற்றார், உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சிப் பள்ளத் தாக்கில் உருட்டி விடப்பட்டனர்.

கோபம் மருத்துவர்கள் பக்கம் திரும்பியது. ஸ்கேன் செய்து பார்க்கப்பட்ட போதுகூட கரு நன்றாக இருக்கிறது - சிசு நன்றாகவே வளர்கிறது - எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றுதானே மருத்துவர் சொன்னார் - அவர் ஆலோசனைப் படித்தானே முறையாக நடந்து கொண்டோம்.

இதற்குப் பிறகும் ஏன் இந்த நிலை? நம்ப வைத்துக் கழுத்தை அறுத்துவிட்டார்களே இந்த மருத்துவர்கள் என்று புலம்பினர்.

மருத்துவரும், பரிசோதனை மய்யப் பொறுப்பாளர்களும் இதற்காக 10 லட்ச ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கினை விசாரித்த கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உறுப்பினர்கள் ரத்தினம், சரசுவதி ஆகியோர் ஸ்கேன் பரிசோதனை அறிக்கை, மருத்துவரின் ஆலோசனை உள்ளிட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரித்துத் தீர்ப்புக் கூறினார்கள்.

பெற்றோர்களுக்கு அய்ந்து லட்ச ரூபாய் நட்டஈடு கொடுக்க வேண்டுமென்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நியாயமான தீர்ப்புதான். மருத்துவர்கள் பொறுப்பாகச் செயல்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறு இல்லை.

அதே நேரத்தில் இன்னொன்றையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டியாக வேண்டும். கரு நன்றாக வளர்ந்து குழந்தை நல்ல முறையில் ஊனமின்றிப் பிறக்கவேண்டும் என்று அன்றாடம் கடவுளிடம் வேண்டினார்களே - கோயிலுக்குச் சென்று பூசைகள் செய்தார்களே - அந்த ஆண்டவன் ஏன் கைவிட்டான்? அந்தக் கடவுள் ஏன் குழந்தை ஊனமின்றிப் பிறக்கச் செய்யவில்லை என்று நினைத்துப் பார்த்தார்களா?

மருத்துவர் என்ற ஒருவர் இருந்தார் - அதனால் அவர்மீது வழக்கு போட முடிந்தது. கடவுள் என்று ஒருவர் இல்லையே. எங்கே போய் முட்டிக் கொள்வது? யார்மீது வழக்குப் போடுவது? அதனால்தானே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் ஒன்று செய்யலாம். அந்த கோயில் அர்ச்சகப் பார்ப்பான்மீது நட்ட ஈடுவழக்கு தொடுத்தால் என்ன? சிந்திப்பார்களா?



8.6.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக