வியாழன், 3 ஆகஸ்ட், 2017

இராவணன்தான்!




சென்னை மயிலாப்பூரில் உரையாற்றிய அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அம்மையார் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்களை இராவணன் என்று கூறியுள்ளார். அவர் எந்தப் பொருளில் அப்படிக் கூறியிருந்தாலும் அது உண்மைதான்.

இராமாயணம் என்பதே ஆரியர்-திராவிடர் போராட்டம்தான் என்று பண்டித நேருவிலிருந்து விவேகானந்தர் வரை கூறியுள்ளனர்.

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா போன்ற நம் தலைவர்கள் இராமாயணத்தை ஆரியர்-திராவிடர் போராட்டமாகவே கருதி மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்துள்ளனர். தீ பரவட்டும் என்று இராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னவர் அறிஞர் அண்ணா. இராமர் பட எரிப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார்.

இராவண லீலா நடத்தியவர் அன்னை மணியம்மையார்.

தென்திசையைப் பார்க்கிறேன் என் சிந்தையெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடடா - என் தமிழர் மூதாதை - என் தமிழர் பெருமான் இராவணன்காண் என்று புயல் பாட்டுப் பாடினாரே நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

பெரும் புலவர் குழந்தை அவர்கள் இராவண காவியம் படைத்தவர்! திராவிட இயக்கத்தின் இந்த வரலாற்றுப் பின்னணியை - தத்துவார்த்த அடிப்படையை அறிந்திராத ஆரிய குல மாதான ஜெயலலிதா - இராமன் பாலத்தை இடிக்கலாமா என்று கூறி உச்ச நீதிமன்றம் சென்று சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்குகிறார்.

இராவணன் என்றால் மோசமானவன் என்று சித்தரித்து கலைஞர் அவர்களோடு ஒப்பிடுகிறார்.

புத்த மார்க்கத்தை ஆரியம் ஊடுருவி உருக்குலைத்தது போல, திராவிட இயக்கத்தில் அண்ணா நாமத்தை உச்சரித்துக் கொண்டே திராவிட என்ற இனப் பண்பாட்டுச் சொல்லைப் பேசிக் கொண்டே, திராவிட இயக்கத்தை ஒழித்திடும் ஒரு நயவஞ்சக வேலையில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார்.

தமிழர்களே, உஷார்! உஷார்!! அண்ணா தி.மு.க.வில் இந்த அய்யங்கார் அம்மையாரை நம்பிக் கொடி பிடிக்கும் அப்பாவித் தொண்டர்களே, தமிழ் இனத்தின் எதிரி என்று பச்சையாக ஜெயலலிதா காட்டிக் கொண்ட பிறகு இனி ஒரு நொடியும் அந்தக் கட்சியில் அங்கம் வகிக்கலாமா? ஜெயலலிதாவுக்காக ஜே போடலாமா?

“மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்டு

வாழ்ந்த என் மற வேந்தர்

பூனைகள் அல்லர்

புலிநிகர் தமிழ் மாந்தர்”



என்றாரே, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அதனை நினைவூட்டுகிறோம். திராவிட இயக்கத்திற்கு ஆரிய மாது தலைமை வகிப்பதா? அனுமதிக்கலாமா?

அடாது, அடாது,

அய்யங்கார் அம்மையாரை எதிர்த்துப் போர்க் கொடி தூக்குவீர்! தூக்குவீர்!


11.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக