தந்தை பெரியார் அவர்களால் தென்னாட்டு லெனின் என்று அழைக்கப்பட்ட தாரவாத் மாதவன் நாயரை (டி.எம்.நாயர்) 51 வயதில் நாடு இழந்து நலிவுற்றது.
ஆறரை அடி உயரம், கம்பீரமான தோற்றம், அடர்ந்த மீசை - யாரையும் அந்தத் தருணத்திலேயே கைது செய்யக் கூடியவையாகும். அவர் சிறந்த பகுத்தறிவாளரும் கூட!
இந்திய அமைச்சரான வெள்ளைக்காரன் மாண்டேகுவே வியப்படைந்து நாயரைப் பற்றி இந்திய டைரியில் குறிப்பிட்டுள்ளார் என்றால், சொல்லவும் வேண்டுமோ?
பார்ப்பனர் அல்லாதாரின் பாதுகாப்பு அரணான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிக்கட்சிக்கு வைரத்தூணாக இருந்த பெருமான் இவர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், திரூருக்கு அருகில் உள்ள துஞ்சன் பரம்பா என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தையார் மாவட்ட முன்சீப், மூத்த சகோதரர் பாரிஸ்டர் - டெபுட்டி கலெக்டர்.
டி.எம்.நாயர், எடின்பரோ பல்கலைக் கழகத்தில் (1894) மருத்துவத்துறையில் M.B. Ch.B.. பட்டம் பெற்றார்; அதன்பின் லண்டனில் காது, மூக்கு, தொண்டை குறித்த அறுவை சிகிச்சைக்கான கல்வியையும் முடித்து எம்.டி. பட்டம் பெற்றார் (1896). பாரிஸ் சென்று இத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். எடின்பரோ பல்கலைக் கழகத்தின் மாணவர் கழகச் செயலாளராகவும், எடின்பரோ இந்தியர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
தொடக்கத்தில் காங்கிரஸ்காரராகத்தான் பொதுப் பணியைத் தொடங்கினார். சென்னை, திருவல்லிக்கேணி வட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார். 12 ஆண்டு காலம் மாநகராட்சியில் ஆற்றிய பணி ஒளி முத்துகள்! சென்னை மாநகராட்சியால் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார் (1912).
காங்கிரஸ் பெயரால், பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததைக் கண்டு, டாக்டர் சி.நடேசனார், பிட்டி தியாகராயர் ஆகியோருடன் இணைந்து நீதிக்கட்சி என்னும் வரலாற்றுத் திருப்பம் தந்திட்ட கோட்டையை எழுப்பினார். 1917இல் கட்சியால் நடத்தப்பட்ட ஜஸ்டிஸ் என்ற ஆங்கில ஏட்டின் ஆசிரியராக விளங்கி பார்ப்பனர்கள் உலகத்தில் பெரும் கலகக்காரராகக் கருதப்பட்டார்.
லண்டன் நாடாளுமன்றத்திற்குச் சென்று பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் நிலை குறித்து டி.எம்.நாயர் எழுப்பிய சங்கநாதம் (அவரது ஆங்கிலப் பேச்சு, ஆங்கிலேயரையும் ஈர்த்து சொக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தது) லண்டன் ஏடுகளில் பரபரப்பாக வெளியிடப்பட்டது.
இரண்டாவது முறை லண்டனுக்குச் சென்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் சாட்சியம் அளிக்கச் சென்ற இடத்தில் - நீரிழிவு நோயாளியான டாக்டர் நாயர் என்னும் சிங்கம் மரணம் அடைந்து, பார்ப்பனர் அல்லாதாரின் வாழ்விலே இருள் சூழச் செய்தது.
நாயர் மாண்டார் என்ற செய்தி அறிந்து சென்னை திருவல்லிக்கேணி பார்ப்பனர்கள், கோயில்களில் தேங்காய் உடைத்து மகிழ்ந்தனர் என்றால், நாயரின் நயத்தக்க தொண்டின் தீவிரத்தைத் தெரிந்து கொள்ளலாமே!
17.7.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக