வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தடை!




சென்னை அரசாங்கம் பல மாதங்களாக கஷ்டப் பட்டு ஆராய்ந்து, இ.பி.கோ. 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகளின்படி ஆட்சேபகரமான அம்சங்கள் இருப்பதாகத் தேடிப்பிடித்து குற்றஞ்சாற்றி புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இராவண காவியம் என்ற நூலைப் பறிமுதல் செய்துள்ளது.

நமது வேலைக்காரச் சிறுவன் நம்மைப் பார்த்துச் சிரித்தான். ஏண்டா சிரித்தாய்? என்றேன். இல்லை, இராவண காவியத்தைத் தடை செய்துள்ளார்களே சார் இவர்கள் இருக்கிற பீடத்திலே இனி என்றைக்குமே எதிர்க் கட்சிக்காரர்கள் இடம் பெற மாட்டார்களா? என்றான். ஏன்? இடம் பெறுவார்களே என்றேன். அவர்கள் ஒரு வேளை, இராமாயணம், பெரிய புராணம், கந்த புராணம் முதலிய எல்லா ஏடுகளுக்குமே தடையுத்தரவு பிறப் பித்துவிட்டால் என்ன சார் ஆகும்? என்றான் அவன்.

எனக்கும் சிரிப்புத்தான் வந்தது. இன்று இராவண காவியத்தில் என்னென்ன குற்றங்கள் காட்டப்படக் கூடுமோ, அவைகள் வேறு எந்தப் புராண இலக்கியத்திலும் இல்லாமல் இல்லை. இராமாயணமேகூட அத்தகைய குற்றச்சாட்டுகளினின்றும் தப்ப முடியாதென்றே தோன்றுகிறது.

- இவ்வாறு பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் புதுவாழ்வு இதழில் (1948 ஜூன்) எழுதினார்.

ஆம், புலவர் குழந்தையின் இராவண காவியம் இன்று தான் தடை செய்யப்பட்டது (2.6.1948) காங்கிரஸ் ஆட்சியால். என்ன குற்றமாம்? இந்தியன் தண்டனைச் சட்டம் 153ஏ என்ன கூறுகிறது? மதம், இனம், பிறந்த இடம், வாழுமிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறுபட்ட குழுக்களிடையே பகையை வளர்ப்பது - (இதற்குரிய தண்டனை மூன்றாண்டு) 295ஏ - என்ன கூறுகிறது? எந்த ஒரு பிரிவு மக்களின் மதத்தையோ, மத நம்பிக்கைகளையோ இழிவுபடுத்தி, அவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவது (இதற்கும் தண்டனை மூன்றாண்டுகள்)

பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புதுவாழ்வு இதழில் கூறியுள்ளதுபோல இத்தகைய குற்றங்களை உண்மையில் புரிந்திருப்பது இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களே.

திராவிடர்களைக் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் இழித்துப் பழிப்பது அவர்களின் இதிகாசங்கள்தானே?

இதற்கு எதிராக தன்மான உணர்வோடு இலக்கியங்கள் படைக்கப்பட்டால் - அது குற்றமா?

கம்பனைக் கரைத்துக் குடித்த ரா.பி. சேதுப்பிள்ளை போன்றவர்கள் கூட புலவர் குழந்தையின் இராவண காவியத் தேன் குடத்தில் வீழ்ந்து புகழ் மொழிகளை உதிர்த்தனர் என்றால் இராவண காவியத்தின் சிறப்பினை எடுத்தோதவும் வேண்டுமோ!

1948இல் இதே நாளில் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இராவண காவியம் மீதான தடை மானமிகு முதல்வர் கலைஞர் அவர்களால் நீக்கப்பட்டது (17.5.1971).



2.6.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக