இரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம், பஞ்சமர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்து பார்ப்பனரல்லாதார்கள் என்பவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு தனி இடமுமாக இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள். இரயில்வே ஸ்டேன்களில் பார்ப்பனர்கள் இறங்கினால், அவர்கள் எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமையலறைக்குள் சென்று நன்றாக புதிதாகச் சூடுடன் உடனே சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வண்டிக்கு வந்துவிடுகிறார்கள்.
பார்ப்பனரல்லாதார் நிலைமையோ எவ்வளவு மேன்மையாக இருந்தாலும் அவன் வெளி மண்டபத்தில் பலகாரத் தட்டத்துக்கு எதிரில் கூட்டமாக நின்றுகொண்டு சாமி! சாமி! என்று காட்டுமிராண்டி ஜனங்கள் திருவிழாக் காலங்களில் கோவிலில் விபூதிக்கு அலைவது போல் ஆளுக்காள் நெருக்கிக் கொண்டு அவதிப்பட்டு ஆறிப்போன கழிபட்ட பதார்த்தங்களை அரைகுறையாய் வாங்கி அவசர அவசரமாய்த் தின்றது. பாதி, தின்னாதது பாதியுமாய் விட்டுவிட்டு ஓட வேண்டியதாய் இருக்கிறது. ரயில்வே ஓட்டல்களில் சாப்பாடு போடுவதும் நீட்டிக்கொண்டே இருந்துவிட்டு வண்டி புறப்படும் சமயம் இலை போடுவதும் சாப்பிட வரும் ஆட்கள் அவதி அவதியாய் அரை வயிறு கூட நிறைய சாப்பிட முடியாமல் பணம் கொடுத்து விட்டு ஓடுவதுமாய் இருக்கிறது. ஊருக்குள் 3 - அணா ஆனால் ரயிலில் 4 - அணா வீதம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
இதைப் பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சிறிதும் செவிசாய்க்கவே இல்லை. இரயில்வே கம்பெனியாருக்கு ஒரு அகம்பாவம் இருந்து வருகிறது. அதென்னவெனில், நம்மைத் தவிர இவர்களுக்கு (பிரயாணி களுக்கு) வேறு கதி என்ன? என்கின்ற ஆணவம் ஒன்று.
பத்திரிகைக்காரர்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்கின்ற எலும்புகளைப் போட்டுவிட்டால், அதன் பேரால் அவர்களுக்குக் கப்பம் கட்டிவிட்டால் நாம் எப்படி, நடந்தாலும் வெளிக்கு வராது என்கின்ற தைரியம் இரண்டு.
மற்றும் அரசாங்கம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. இரண்டும் ஒரே ஜாதி என்பது மாத்திரமல்லாமல் பார்லிமெண்டு மெம்பர்கள் முதல் ரயில்வே கம்பெனிக்குப் பங்குக்காரர்கள் தானே என்கின்ற சலுகை முதலிய காரியங்களோடு ஒரு தனிப்பட்ட பிரயாணி தனது கஷ்டத்துக்கு எப்படி சமாதானம் தேடிக் கொள்ள முடியும் என்கின்ற கவலையற்ற தன்மை ஆகியவைகள் சேர்ந்து இரயில்வே கம்பெனியாரை இக்கஷ்டங்களைக் கவனிக்கச் செய்யாமல் செய்து வருகிறது.
மற்றொரு நாடகம் என்னவென்றால், இரயில்வே பிரயாணிகள் சங்கம் என்று ஒரு போலிச் சங்கம்; அதற்கொரு தலைவர்; அவருக்கொரு கவுரவ உத்தியோகம்; அவர்கள் சொந்தக்காரர் களுக்கு இரயிலில் சம்பள உத்தியோகம்; வேறுபல சலுகை. இவை எல்லாம் சேர்ந்து கம்பெனியாருக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம்.
இவ்வளவையும் சகித்துக் கொண்டு, ரயில் பிரயாணம் செய்து இரயிலுக்கு பணம் கொடுப்பவர்கள் பார்ப்பனரல்லாதார். ஆனால் இரயிலில் 50,100, 200 ரூ. சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்கள் கொடுப்பது 100க்கு 99-பார்ப்பனர்களுக்கே, 20ரூ. 30ரூ. உத்தியோகங்கள் கூட எல்லோரையும் விட 100க்கு 90 பார்ப்பனர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன.
- குடிஅரசு, துணைத் தலையங்கம், 02.02.1936
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக