வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தமிழவேள் உமாமகேசுவரனார்




தமிழவேள் வேம்பப்பிள்ளை உமாமகேசுவரனார் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் தஞ்சை - கரந்தைத் தமிழ்ச் சங்கமும் தமிழ்க் கல்லூரியும் நினைவுக்கு வந்தே தீரும்.

மதுரை என்றால் அங்கு தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர் போல் இவரும் ஆவார். தஞ்சை கரந்தட்டான்குடியில் (கரந்தை) பிறந்தவர் இவர் (7.5.1883). அந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் சட்டம் படிப்பது என்பதே அரிதினும் அரிது. இவரோ ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அதனைச் சாதித்துக் காட்டிய தலை நிமிர் தமிழராவார்.

அந்தக் காலத்திலேயே பார்-அட்-லா படித்த ஏ.டி.பன்னீர்செல்வமும், வழக்குரைஞர் உமாமகேசுவரனாரும் தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சியின் உரமிக்க நிமிர்ந்த தூண்களாக ஒளிவீசினர்.

காந்தியார் அவர்கள் தஞ்சாவூரில் உக்கடை ஹவுசில் தங்கி இருந்தார். (16.9.1927) அப்பொழுது காந்தியாரை நீதிக்கட்சி சார்பில் சந்தித்தவர்களில் ஒருவர் உமாமகேசுவரனார் ஆவார். ஏ.டி.பன்னீர்செல்வம், உக்கடைத் தேவர், சையத் தாஜுதீன், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோர் காந்தியாரைச் சந்தித்தனர்.

உமாமகேசுவரனார் காந்தியைப் பார்த்து எழுப்பிய வினாக்கள். பிராமணர் - பிராமணரல்லாதார் விவகாரம் வரவரச் சிக்கலாகி வருகிறது. தலைவர்கள் இதில் தலையிட்டு, சமாதானத்தை உண்டு பண்ண வேண்டும் என்பது முதல் கோரிக்கை.

இரண்டாவது: அதிகாரம் பெறுதல் என்பது பல நோக்கங்களில் ஒன்றாகும். சமூகத் தீமைகளைப் போக்குவதும், மத சம்பந்தமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டு மென்பதும் எங்களுடைய மற்ற கோரிக்கை.

மூன்றாவதாக, உமாகேசுவரனார் காந்தியாரிடம் கூறியது:

இந்து சமயத் தலைவர்கள் எங்கள் இயக்கத்தைக் கவனியாதிருந்தபோது, நடந்தவரையில் நடைபெறட்டும் என்று கருதி இந்துக்கள் அல்லாதாரும் இயக்கத்தின் தொடக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பிராமணரல்லாதார் பல வழிகளிலும் பிராமணர்களால் அவமதிக்கப்பட்டிருக்கின்றனர். பொது மக்களிடையே இப்பொழுது விழிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் காந்தியாரிடம் எடுத்துரைத்தார்.

தமிழ்ப் பொழில் என்னும் இதழையும் நடத்தினார். ஸ்ரீமான், ஸ்ரீமதி என்ற வட சொற்களுக்குப் பதில் திருமகன், திருவாட்டி என்னும் சொற்களை அதில் கையாண்டார்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலைகொளும் அஞ்சல் போன்ற அருஞ்சொற்களைத் தமிழுக்குத் தந்தார். யாழ் நூல், நக்கீரர், கபிலர், தொல் காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்த செம்மலும் இவரே! கூட்டுறவுத் துறையில் அவர் பொறித்த முத்திரைகள் அவர் பெயரை இன்றும் நினைவு கூர்கின்றன.



6.5.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக