தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பித்தவர்
என்று புகழப்படுபவர் உ.வே.சாமிநாதஅய்யர். அந்தப் பணி பாராட்டுதலுக்கு உரியதே!
இவரைப் புகழும் பார்ப்பனர்கள் இவரின் குருவாகிய - தமிழ் இலக்கியங்களை, இலக்கணங்களை இவருக்கு முறைப்படி போதித்தவரான - மகா வித்துவான்
மீனாட்சி சுந்தரனாரைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதுதான் பார்ப்பனர்களுக்கே
உரித்தான இனப்பற்று என்பதைவிட - இனவெறியாகும்.
உ.வே.சா. தமிழ்த் தொண்டு எந்த வகையைச் சார்ந்தது? பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஆரியப் பார்ப்பனர்களின்
அளவிறந்த கொட்டங்கள் எனும் நூலினை எழுதியுள்ளார். உ.வே.சா.பற்றிப் பல தகவல்களைத்
தந்துள்ளார். தமிழ்ப் பாஷை என்றுதான் எழுதுவாரே தவிர தமிழ் மொழி என்று எழுத
மாட்டார். நூல்களை புஸ்தகங்கள் என்றுதான் எழுதுவார். அரசுக் கட்டிலை சிங்காதனம்
என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும்,
விண்மீன் என்பதை நக்ஷத்திரம் என்றும் எழுதும்
பார்ப்பன - சமஸ்கிருதப் போக்குடையவர் என்பதை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புறநானூற்றில் ஆன்முலையறுத்த என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல் யாழ்ப்பாணத்துப் பழைய
வெளியீடு ஒன்றில் அறவோர் என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர்
குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் பார்ப்பார் என்று
குறிக்கப்பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப்
பெறவில்லை. அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா தெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பாருக்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில்
காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற
பார்ப்பனக் கொலை எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும் - இவ்வாறு
பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப் பெற்ற கருத்து மேலும் வலிவுற வேண்டும் என்னும்
உள்நோக்கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும் என்று பாவலரேறு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
உ.வே.சா. அவர்கள் தனது என்சரிதம் எனும் நூலில் அக்கிரகாரம் எப்படி
தோன்றியது என்கிற ஒரு தகவலைத் தந்துள்ளார். சற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு
முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் தம்முடைய பரிவாரங்களுடன்
புறப்பட்டார். தஞ்சைக்குக் கிழக்கே 15 மைல் தூரத்தில்
பாபநாசம் அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் போஜனம் முடித்து தாம்பூலம்
போட்டு சிரம பரிகாரம் செய்தார். அன்று ஏகாதசி. ஏகாதசியன்று அரசர் ஒரு வேளை
மாத்திரம் உணவு அருந்துவார். தாம்பூலம் தரிக்க மாட்டார். ஆனால் அன்று அதனை
மறந்துவிட்டார். விரதத்துக்குப் பங்கம் ஏற்பட்டது குறித்து வருந்தினார். இதற்கு
என்ன பரிகாரம் என்று கேட்க, ஓர் அக்ரகாரம் பிரதிஷ்டை செய்து,
வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய
அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்
என்றனர். அவ்வாறே அரசன் செய்தான். அந்த ஊர்தான் உத்தமதானபுரம். அவ்வூரில்தான்
உ.வே.சா. பிறந்தார்.
அரசன் தோஷப்பட்டான் என்றே வைத்துக் கொள்வோம் - அதன் பலன்
பார்ப்பானுக்குப் போய்ச் சேர வேண்டுமா?
அக்ரகாரம் எப்படி எல்லாம் தோன்றியிருக்கிறது பார்த்தீர்களா?
19.2.2011
நூல் : விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக