திங்கள், 14 ஆகஸ்ட், 2017

நமது வேலை



இந்து ஆரியர்கள் மதம், சாஸ்திரம், இலக்கியம் முதலிய துறைகளில் நம்மை தங்களுக்கு ஆள்படுத்திக் கொண்டு அரசியல் என்னும் பேரால் நம்மை தன்வயப்படுத்திக் கொண்டு சுரண்டி அச்சுரண்டலில் அய்ரோப்பிய ஆரியனுக்கு ஒரு பாகம் கொடுத்துவிட்டு பெரும்பாகத்தை இந்திய ஆரியர்கள் அனுபவிக்கிறார்கள்.  இதிலிருந்து மீளுவதற்கு ஆரியத்தில் இருந்து, எவ்வகை ஆரியத்தில் இருந்தும் விலக வேண்டும்.  விலகி ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் கணவன் மனைவி போன்றோ, தகப்பன் பிள்ளை போன்றோ, எஜமான் ஆள்காரன் போன்றோ ஆரியனுக்கும் நமக்கும் தன்மை முறை வைத்துக் கொண்டு குறை கருதாமல் இழிவு கருதாமல் திருப்தியாய், மன நிம்மதியாய் வாழ வேண்டும்.  முடியாவிட்டால் இப்போராட்டத்தில் மடிந்து ஒழிய வேண்டும்.  அப்படிக்கு இல்லாமல் சாந்தமும், ஓய்வும் அற்று பயனில்லாத வேலையில் பணியைச் செய்து கொண்டு இழிவும் குறையும் கொண்ட மனத்திரனாய் துக்க உருவாய் வாழ்வது மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பது நமது முடிவு.

திராவிட சமுதாயத்திற்கு மானம், அறிவு, மனிதத்தன்மை என்பவை இல்லாமல் போக அடியோடு இல்லாமல் போக ஆரியர்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் அந்த வெற்றியை அழித்து நாம் மனிததன்மை பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்றே சொல்லுவோம்.  இதில் இறங்குவதும் மிக்க யோசனை செய்து செய்ய வேண்டிய காரியம் என்றும் சொல்லுவோம்.

ஏன் எனில் திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத்தன்மை இன்று நேற்றல்லாமல்

2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவைகளாகும்.  திராவிட அரசர்கள் மூவேந்தர்கள்,  நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள்.  அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்ளுபவர்களாயிருக்கிறோம்.  இதன் இழிவை நம்மில் வயது வந்து வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள்.  ஆகவே நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.  அதுவும் புரட்சி வேலையாக இருக்கிறது.  அதனாலேயே மிகமிக கஷ்டமான வேலை என்கிறோம்.  அதனாலேயே இவ்வேலைக்கு இளைஞர்களையும் மாணவர்களையும் பெரிதும் அழைக்கின்றோம்.

 -  குடிஅரசு, தலையங்கம், 19.01.1946

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக