செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

யார் வகுப்புவாதிகள்?



கனம் ராஜகோபாலச்சாரியார் ஜஸ்டிஷ் கட்சியையும், முஸ்லீம் லீக்கையும் வகுப்புவாதக் கட்சி என்று சொல்லி அவைகளை ஒழிக்க வேண்டுமென்கின்றாரே, இன்று அவரது மந்திரி சபையில் வகுப்புவாத மில்லையா என்று பாருங்கள்.  இன்று பத்து மந்திரிகளில் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் ஒன்றுக்கு அய்ந்துவீதம் மந்திரிகளாக வந்திருக்கிறார்களே.  இது வகுப்புவாதமில்லையா?

அதுமட்டுமல்ல.  கீழ்சபைக்கு இரண்டு தலைவர்களும் பார்ப்பனர்களாகவே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாத மில்லையா?  மேல்சபைத் தலைவருக்கும், பார்ப்பனரையே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா?  பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியும் பார்ப்பனர்களாகவே ஆக்கிக் கொண்டார்களே அது வகுப்புவாதமில்லையா?  நம் நாடு மாத்திரமல்லாமல் ஆறுமாகாண முதல்மந்திரிகளும் பார்ப்பனர்களாகவே அமர்ந்து கொண்டார்களே!  அது வகுப்புவாத மல்லவா?  திவான் பகதூர் பட்டம் விட்ட பெரிய படிப்பாளியும் அனுபவமும் உள்ள ராமலிங்க செட்டியாரை மூலையில் உட்கார வைத்து விட்டு ஒரு சாதாரண படிப்பாளியும் அனுபவமுமில்லாத ஒரு பார்ப்பனர் மேல்சபைக்கு தலைவராக்கப்பட்டு விட்டாரே!  அது வகுப்புவாதமல்லவா? 

 திருச்சி தேவரை தெருவில் திண்டாட விட்டுவிட்டு காங்கிரசுக்கு துரோகம் செய்து காங்கிரசால் தண்டிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் மந்திரியாக்கப்பட்டாரே அது வகுப்புவாதமல்லவா?  இருபத்தாறு மிருக வைத்திய உத்தியோகத்துக்கு 19 உத்தியோகம் பார்ப்பனருக்கு கொடுத்தால் அது வகுப்புவாதமல்லவா?  கார்ப்பரே­னில் 10 எட்மாஸ்டர் வேலை காலியாக்கப்பட்டதற்கு 10க்கும் பார்ப்பனர்களையே நியமித்தது வகுப்புவாதமில்லையா?  கார்ப்பரே­ன் கல்வி அதிகாரி வேலைக்கு தகுதியான ஒரு பார்ப்பனரல்லாத தோழர் சிவசைலம்பிள்ளை எம்.ஏ.எல்.டி.யை கார்ப்பரே­ன் கவுன்சிலும் காங்கிரஸ் கட்சியும் தெரிந்தெடுத்தும் அதைத் தள்ளி விட்டு குறைந்த யோக்கியதையுடைய ஒரு கீழ்ப்பார்ப்பனரை அதிகச் சம்பளத்தில் நியமித்தது வகுப்புவாதமில்லையா?  இன்னும் பார்ப்பனரல்லாதார் உத்தியோகங்கள் காலியாவதற்கெல்லாம் பார்ப்பனர்களைப் புகுத்துவது தப்பான வழியில் பார்ப்பனர் அல்லாத பெரிய உத்தியோகஸ்தர்களை ஒழிக்க முயற்சிப்பதும் வகுப்புவாதமல்லவா?  மற்றும் காங்கிரசிலும் சென்னைப் போன்ற இடங்களிலேயே சாமிவெங்கிடாசலம் செட்டியார், விநாயக முதலியார், லட்சுமண சாமி முதலியார் சர்க்காரைச் செட்டியார் ஆதி கேசவலு நாயக்கர் முதலிய பார்ப்பனரல்லாதார் மீது மாத்திரம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துத் தண்டிப்பதும் காங்கிரசை விட்டு விரட்டுவதும் பார்ப்பனர்களாயிருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனமும் அக்கிரமும் செய்தாலும் அதைப் பற்றி சற்றும் கவனியாமல் இருப்பது வகுப்புவாதமல்லவா?  இவை எல்லாமுமா அகஸ்மாத்தாய் ஏற்பட்டவை என்று கேட்கிறேன்.

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்கள்தான் வீட்டிற்குள்ளே போகுமே தவிர, வீட்டிற்குள் இருக்கும் சாமான்கள் ஒன்றுகூட வெளியில் எறியப்பட மாட்டா என்பது போல் எல்லா அகஸ்மாத்தும் பார்ப்பனர்களுக்கேதான் அனுகூலமாயிருப்பானேன்?



- வேலூர், கோயம்புத்தூரில் ஆற்றிய உரை. குடிஅரசு, 29.05.1938

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக