வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கா. நமச்சிவாயனார் (1876-1937)



தமிழர்களின் நெஞ்சில் என்றும் நிற்கக்கூடிய மாபெரும் புலவர் - பேராசிரியர் கா. நமச்சிவாயனார் ஆவார். அவருடைய பிறந்தநாள் இந்நாள் (10.02.1876).

வ.ஆ. மாவட்டம் காவேரிப்பாக்கம் என்னும் ஊரில் இராமசாமி முதலியார் - அகிலாண்டவல்லி இணையருக்கு மகனாகப் பிறந்தவர். திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியரான தம் தந்தையாரிடம் துவக்கக் கல்வி பெற்றார். சென்னையில் செயின்ட் சேவியர் உயர்நிலைப்பள்ளி, நார்த் விக் மகளிர் பாட சாலை, சிங்கிலர் கல்லூரி, எஸ்.பி.ஜி. உயர்நிலைப்பள்ளி, இராணி மேரி கல்லூரி - இறுதியாக சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College) ஆகியவற்றில் தமிழ் ஆசிரியராக அரும்பணி புரிந்த பெருமான் இவர்.

1920 முதல் 1934 வரையில் அரசு தமிழ்க் கல்விச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். தமிழாசிரியர்கள் தனித்தமிழ் தேர்வு எழுதி வித்துவான் பட்டம் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் இவரே! நல்லாசிரியன் எனும் திங்கள் இதழை 15 ஆண்டுகள் நடத்தி, ஆசிரியர்களுக்கு நல்வழிகாட்டிய நன்மகனும் இவரே!

பாடநூல்களை எழுதியவர் இவர். ஆத்திசூடி, வாக்குண்டாம் - நல்வழி முதலிய சிறு நூல்கள் மட்டுமல்ல; தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம் இறையனார் களவியல் முதலிய பெரு நூல்களையும் பதிப்பித்த சாதனை இவருக்குரியது. ஒரு முக்கியமான வரலாற்றுக் குறிப்புக்கு இவர் பெயரை தந்தை பெரியார் வெளிப்படுத்தியுள்ளார்.
காலஞ்சென்ற கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81. அதே நேரத்தில் அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரி என்பவருக்கு மாதச் சம்பளம் ரூ.300-க்கும் மேல்.

இதுகுறித்து சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த பனகல் ராஜா அவர்கள் தந்தை பெரியார் அவர்களிடம் மனம் கொதித்துக் கூறினார், நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று சொன்னார். அதன்பிறகே சமஸ்கிருதப் பேராசிரியர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியர் களுக்கும் இடையே இருந்த சம்பள வேறுபாடு நீக்கப்பட்டது.

(ஆதாரம்: தந்தை பெரியார் உரையிலிருந்து விடுதலை 15.2.1960)

தமிழுக்குப் பெரியார் என்ன செய்தார்? நீதிக்கட்சி என்ன சாதித்தது என்று சந்துமுனையில் சிந்து பாடும் தி(தெ)ருமேனிகள் கொஞ்சம் சிந்திக்கட்டும்!


10.2.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக