ஞாயிறு, 16 ஜூலை, 2017

கெடுபிடியா?

விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது  இதனை வைத்து மதவெறிக்குத் தூபம் போட ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் சக்திகள் திமிர் முறித்துக் கிளம்பிவிடும். 60 அடி, 70 அடி பிள்ளையார் பொம்மைகளை ஊர்வலமாகத் தூக்கிச் சென்று, பொது மக்கள் மத்தியில் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துவது அவர்களின் நோக்கம்.

இதுகுறித்து சென்னை  உயர்நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பினைக் கொடுத்துள்ளது. மூன்றரை அடி உயரத்திற்குமேல் பொம்மைகள் இருக்கக் கூடாது. விநாயகர் பொம்மைகளை களிமண்ணால் மட்டுமே செய்யவேண்டும்  பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்ற வேதியியல் பொருளால் செய்யக்கூடாது; பெயின்ட் போன்ற நச்சுப் பொருள்களைப் பயன்படுத்தி பொம்மைகளை உருவாக்கக் கூடாது.

நச்சுப் பொருள்களைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகளை, சிலைகளை நீரில் கரைத்தால் நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன என்று கூறி நீதிமன்றம் இதில் தலையிட்டது.

இந்தச் செய்தியினை வெளியிட்ட தினமலர் நாளேடு (14.8.2005) நீதிமன்றத்தின் இந்த உத்தரவாலும் காவல் துறையினரின் கெடுபிடிக்களாலும் பொம்மை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில், பெரும் கவலை ஏற்பட்டுள்ளதால், இந்தத் தொழிலையே நம்பி வாழ்வோர் வேதனைப்படுகிறார்கள் என்று நீலிக் கண்ணீர் வடித்துள்ளது.

மற்ற மற்ற பிரச்சினைகளில் சுற்றுச்சூழல்பற்றி பெருங்கவலை கொள்வதுபோல அலறும் தலைப்புகளை வெளியிடும் தினமலர் ஏடு, பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பொருள்களால் தயாரிக்கப்படும் பொம்மைகளை நீரில் கரைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; நீர்வாழ் உயிரினங்கள் மடிந்துவிடும் என்கிற அறிவியல் ரீதியான உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் தடுமாறுவது ஏன்?

காவல்துறையினர் நீதிமன்றத் தீர்ப்புப்படி நடக்க ஆரம்பித்தால், அதற்குக் கெடுபிடி என்று தலைப்புக் கொடுப்பானேன்?

பார்ப்பனர்களின் உயிர்நாடி என்பது மக்கள் வைத்துள்ள பக்தியில்தான் பத்திரமாக இருக்கிறது. பக்திக்கு பழுது என்றால், அவர்களின் பிழைப்பு கந்தலாகிவிடும். அதனால்தான் பக்தியைப் பாதிக்கும் எந்தத் துரும்பையும் தூக்கிப் பிடிப்பார்கள்  பரிதாபத் தமிழர்கள் சிந்திப்பார்களாக!

15.08.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2) 

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக