1930 ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 27) தான் சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சியின் நான்காவது அமைச்சரவை பதவியேற்றது. 70 விழுக்காடு வாக்காளர்கள் நீதிக்கட்சிக்கு வாக்களித்தனர். முதலமைச்சராக பி.முனுசாமி நாயுடு பதவியேற்றார். பி.டி.
ராஜனும், குமாரசாமி ரெட்டியாரும் சக அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.
முதலமைச்சர் உள்ளாட்சி முதலிய துறைகளைக் கவனித்துக் கொண்டார். இரண்டாவது அமைச்சரான பொன்னம்பலம் தியாகராஜன் (பி.டி.
ராஜன்) பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பேற்றார். மூன்றாவது அமைச்சரான குமாரசாமி ரெட்டியார் கல்வி மற்றும் எக்சைஸ் துறைகளைக் கவனித்துக் கொண்டார். பி.
ராமச்சந்திர ரெட்டி சட்டமன்றத் தலைவரானார்.
இந்த அமைச்சரவை இரண்டாண்டு காலமே நீடித்தது.
இக்காலகட்டத்தில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்க்கவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டது. 1929 அக்டோபர் 5, 6 ஆகிய இரு நாள்களில் நெல்லூரில் நீதிக்கட்சியின் மாநாடு நடைபெற்றது. பி.
முனுசாமி நாயுடு நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வகுப்புரிமையை ஆதரிக்கும் பார்ப்பனர்களையும் நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஏ.பி.
பாத்ரோ அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். சர்.
ஆர்.கே.
சண்முகம் செட்டியார், தந்தை பெரியார் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.
மக்கள் பிறவியில் ஜாதி உண்டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சி எந்தப் பார்ப்பனரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் நமக்குப் பயன் படாது என்று அழுத்தமாகக் கூறினார் பெரியார்.
இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பாத்ரோவுக்கு ஆதரவாக 7 வாக்குகளும், தந்தை பெரியாருக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குகளும் கிடைத்தன.
இந்த மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே அம்மாநாட்டைப்பற்றி தந்தை பெரியார் குடிஅரசு (22.9.1929) இதழில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே - தேன்கூட்டில் நெருப்பு வைக்கப்பட்டதுபோல் இயக்கம் செத்து பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை உறுதியாகச் சொல்கிறோம் என்றார்.
நெல்லூர் மாநாட்டில் நீதிக்கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், 1930 அக்டோபர் 27 ஆம் தேதி நான்காவது நீதிக்கட்சி ஆட்சியின் முதலமைச் சராகப் பொறுப்பேற்றவருமான பி. முனுசாமி நாயுடு பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார்.
1930 ஜூன் மாதத்தில் நடை பெற்ற நீதிக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நீதிக்கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
தந்தை பெரியார் குடிஅரசு, திராவிடன் வாயிலாக இதனைக் கண்டித்து எழுதிக் கொண்டே இருந்தார். இதன் விளைவு முதலமைச்சர் முனுசாமி நாயுடு மீது வெறுப்பு அதிகமாகி இரண்டாண்டு காலமே தாக்குப் பிடித்து அவர் முதலமைச்சராக இருந்தார். 1932 அக்டோபர் 8 ஆம் தேதி தஞ்சையில் கூடிய கூட்டத்தில் பி.
முனுசாமி நாயுடு கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பொப்பிலி அரசர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் தந்தை பெரியார்தம் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களின் பங்களிப்பு அதிகமாகும்.
இதன் காரணமாக 1932 நவம்பர் 5 இல் பொப்பிலி அரசர் (ராவ் ஸ்வேதாசலபதி ராம கிருஷ்ண ரங்கராவ்) பதவியேற்றார். தந்தை பெரியாரின் அன்பர் இவர் ஆவார்.
பார்ப்பனர்களை திராவிடர் இயக்கத்தில் சேர்ப்பது என்பது பிற்காலத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டதன் விளைவுதான் திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சிக்குப் பார்ப்பன அம்மையார் தலைமை தாங்கும் நிலை ஏற்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
27.10. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக