ஆப்பிரிக்கா நாட்டிலே ஒருவிதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாகப் போட்டுக்கொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டுத் தொழுவார்கள். கூடப்பிறந்தவரைக் கொன்று சாமிக்குப் படைப்பார்கள். கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு, அந்த இனத்தைச் சேர்ந்தவர்தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும் உங்களிட மாகட்டும் ஓர் ஆப்பிரிக்கா வாசியோ அல்லது இங்குள்ள வேறு எவனோ சொன்னால், சொல்பவனின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா, விழாதா?
நாலு தலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, ஆறுதலைச்சாமி, ஆனைமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும்சாமி, காளைஏறும் கடவுள், காக்கைமீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷிபத்தினிகளிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இந்தச் சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித் துணியும்? ஆகவேதான், நாம் இந்து அல்லவென்று கூறுகிறோம்.
நமக்கு நாலு,
ஆறு,
நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊண் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்காராதிகள், அப்பம், பாயசம் அக்காரவடிசல் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி!
அர்ச்சனை உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும், நம்மிடத்திலிருந்து ``தியானத்தைப் பெறட்டும், அருளைத் தரட்டும்; நம்மிடத்திலிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக