ஞாயிறு, 16 ஜூலை, 2017

காமராஜர் பச்சைத் தமிழர் ஏன்?


1937_-39 இல் பிரதம அமைச்சராக இருந்த போது 2500 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். மது விலக்கினை அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்யவே பள்ளிகளை மூடுவதாகக் காரணம் சொன்னார். தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று ஒரு திருடனைக் கேட்டபோது, புல் பிடுங்க ஏறினேன் என்று சொன்னானாம். அந்தக் கதையாக அல்லவா இது இருக்கின்றது. ஆச்சாரியாரின் இந்தச் சூழ்ச்சியை விளக்கி மது விலக்கின் இரகசியம் என்று குடிஅரசு இதழில் (24-_10-_1937) தந்தை பெரியார்  எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937-_39 கால கட்டத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே குறைவு. அந்த நேரத்தில் 2500 தொடக்கப் பள்ளிகளை மூடுகிறவர்க்குப் பெயர் தான் மூதறிஞரா? நிதியைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிய ஆச்சாரியார் பார்ப்பனர்கள் படிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்து சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தாரே!

நீதிக்கட்சியின் ஆட்சியின்போது .பி.பாத்ரோ அவர்களால் செயல்படுத்தப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தை நிறுத்தினார். சேலம் ஜில்லா போர்டார் தங்கள் வட்டாரத்தில் அனைவருக்கும் கட்டாய மாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக ரூ 13,500 தொகையை ஒதுக்கி இருந்தார்கள். அதற்கான அனுமதியையும் அரசிடம் கேட்டார்கள். பிரதம அமைச்சர் ஆச்சாரியார் என்ன செய்தார் தெரியுமா?

நிதிநிலை இடம் தராது. அதனால் அனுமதி அளிக்க முடியாது என்று ஒரு வரியில் பதில் எழுதிவிட்டார்.
எல்லா செலவினங்களையும்  கணக்கிட்டுதான் இந்தத் தொகையை கல்விக்காக ஒதுக்கி உள்ளோம் என்று மறுபடியும் அரசுக்கு எழுதினர். அந்த முறையீட்டையும் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார்.

ஈரோடு நகராட்சியார் வீட்டு வரியைக் குறைத்துக்  கொள்ள நூற்றுக்கு 2 ரூபாய் - வரவு செலவுகளை சரிக்கட்டக் கொடுத்து அரசிடம் அனுமதி கேட்டனர் . மனுவாதி ஆச்சாரியார் என்ன பதில் எழுதினார்? வீட்டு வரியைக் குறைக்க முடியாது; வேண்டுமானால் கல்வி வரியைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பதில் எழுதினார்.

கல்வி ஒழிப்புக் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவர் இந்த ஆச்சாரியார்.

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்குக் குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிகளும் 60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட காட்டுத்துறைக் கல்லூரியை (Forest College) இழுத்து மூடினார்.

நம் பிள்ளைகள் படிப்பதைத் தடுக்க பள்ளிக் கல்வி சம்பளத்தை (Tuition Fees) உயர்த்தினார். முசுலிம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெற்றுவந்த உதவித் தொகையையும் (Stipend) நிறுத்தினார்.

ஏழு வயதானால்தான் பள்ளியில் சேரமுடியும் என்றார். பாடங்கள் ஏதாவது ஒரு கைத்தொழிலை அனுசரித்ததாக இருக்க வேண்டும் என்றார். அதன் மூலம் வரும்படி வருமாறு செய்து, அந்த வருமானத்தின் மூலமே பள்ளிக் கூடங்கள் நடத்த வேண்டும் என்றார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையையொட்டி தமிழர்களாகிய நமது பிள்ளைகள் கல்லூரிகளில் நுழைவதற்காக நீதிக்கட்சி ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்குழுவினை (College Selection Committee) ஒழித்துக் கட்டினார் ஆச்சாரியார். நேர்முகத் தேர்வுக்கு இருந்து வந்த 150 மதிப்பெண்களை 50 ஆகக் குறைத்த புண்ணியவான் இந்த ராஜாஜிதான்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்பதிலே கண்குத்திப் பாம்பாக, கண்களில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு சதா அதே சிந்தனையிலும், செயலிலுமாக இருந்தார் என்பதுதான் சுருக்கமான கணிப்பாக இருக்க முடியும்.

இந்த அணுகுமுறைதான் தமக்கு நெருக்கமான நண்பராக இருந்த ஆச்சாரியாரை - வீழ்த்தும் நிலைக்கு தந்தை பெரியாரை வேகமாகத் தள்ளிவிட்டது. காமராசரைப் பச்சைத் தமிழராகப் பெரியார் ஆக்கியதும் இந்த அஸ்திவாரத்தின் மீதுதான்.

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக