ஞாயிறு, 16 ஜூலை, 2017

காளஹஸ்தி


காளஹஸ்தி என்ற ஊர் ஆந்திர மாநிலத்தில் இருக்கிறது. அங்கு ஒரு கோயிலும் இருக்கிறது. அங்கு ஜெகன்மோகினி என்ற திரைப்படத்தை விட்டலாச்சார்யா எடுத்தார்.

அந்தப் படத்தில் ஒரு காட்சி! ஆடு, பாம்பு என்பவை அந்தக் கோயில் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த நதியில் குளித்து பாப விமோசனம் அடைந்தன என்பதாம்.

இந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பின் பக்தர்கள் மத்தியிலே ஒரு மவுசு வந்துவிட்டது. பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர். வருமானமும் குவிய ஆரம்பித்து விட்டது. அதற்கப்புறம் என்ன? இடிந்து வீழ்ந்து கிடந்த அந்தக் கோயிலை எடுத்துக் கட்டி விட்டார்கள்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பக்கம் விட்டலாச்சார்யா போனபோது கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்களும், பக்தர்களும் அவரை சூழ்ந்துகொண்டு நன்றி தெரிவித்தனராம். இதனை விட்டலாச்சார்யாவே கூறி மிகவும் சந்தோஷப்பட்டார்.

இவ்வளவுக்கும் இந்தப் படம் எடுத்த பிறகு அமெரிக்கா சென்று இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் விட்டலாச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காளஹஸ்தி கோயில் புண்ணிய நதியில் குளித்தால் பாபம் நீங்கும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கை விட்டலாச்சார்யாவுக்கு இருந்திருக்குமேயானால் அறுவை சிகிச்சைக்கு அவர் ஏன் அமெரிக்காவுக்கு ஓட வேண்டும்? ஊரை ஏமாற்றிக் காசைப் பறிக்கத்தானே இல்லையா?

திரைப்படத்தைக் காட்டி பாமர மக்களை ஏமாற்றலாம். அவ்வளவுதான்! ஆமாம். இப்பொழுது ஏன் காளஹஸ்தி மற்றும் விட்டலாச்சாரியா நினைவு வந்தது?

காரணம் இல்லாமலா? ...தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த வாரம் அந்தக் காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று புண்ணிய நீரில் குளித்து, பூஜைகள் நடத்தியிருக்கிறார் காணிக்கைகளையும் கணிசமாகக் கொடுத்திருக்கிறார்.

கடந்த தேர்தலுக்கு முன்பு கூட திருக்கடவூர் கோயிலுக்குச் சென்று (மார்க்கண்டேயனின் மரணத்தைத் தடுத்து என்றும் பதினாறு வயதிலேயே இருக்கக் கடவது என்று சிவன் வரம் கொடுத்த கோயிலாம்) யாகம் உட்பட பல வகை வழிபாடுகளை நடத்தினார். தேர்தல் முடிவு என்னவாயிற்று என்பது நாட்டுக்கே தெரியும்.

யார் யாருக்கோ விமோசனம் கிடைக்கிறது. நமக்குக் கிடைக்காதா என்ற நப்பாசையில் ஜெயலலிதா போயிருப்பாரோ?

21.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3


நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக