ஞாயிறு, 16 ஜூலை, 2017

மறுக்க முடிந்ததா?


தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளை எதிர்க்க முடியாதவர்கள், தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை வெல்ல முடியாதவர்கள், ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழித்து விடுவது உண்டு.

பெரியார் வீட்டுக்குள் பிள்ளையார் படம் இருக்கிறது என்கிற கட்டுக்கதைதான் அது. இந்தக் கோழைத்தனம் இன்றளவும் இந்தப் பார்ப்பனர்களுக்கு உண்டு; நாளையும் அவர்களை விடப்போவதில்லை.

கே.சி. லட்சுமிநாராயண அய்யர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

1962 பொதுத் தேர்தலின் போது ராஜாஜியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நான் பகவத் கீதையைப் படிக்கிறேன் என்று அண்ணாதுரை தெரிவித்ததை எழுதுகிறார்.

பகுத்தறிவாளர்கள் கீதையை மட்டுமல்ல; இராமாயணம், மகாபாரதம், பதினெண் புராணங்களையும் படிக்கக் கூடியவர்கள்தான். எதையும் படித்துப் பார்த்துதான் அவற்றின் மூடத்தனத்தை, முடை நாற்றமெடுக்கும் ஆபாசத்தின் முகத்திரையைக் கிழித்து எடுத்துக் காட்டி வருகிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் படிக்காத இராமாயணங்களா? அப்படி அக்குவேர், ஆணிவேர், மூலவேர் வரை சென்று படித்துப் பார்த்துதான் இராமாயணப் பாத்திரங்கள் எனும் நூலை எழுதினார். அது ஆங்கிலத்திலும், மராட்டியத்திலும், இந்தியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டு இலட்சக்கணக்கில் மக்களைச் சென்றடைந்தது.

இதுவரை பார்ப்பனர்களாலோ, எந்தக் கொம்பர்களாலோ ஒரு வரியை மறுக்க முடிந்ததா?


நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக