ஞாயிறு, 16 ஜூலை, 2017

குரு, சனி!


உத்தரப்பிரதேசம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா பெயரில் உள்ளது சட்டப் பல்கலைக் கழகமா அல்லது சாமியார்கள் கூத்தடிக்கும் சோம்பேறிகளின் மடமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்கள் தங்கள் பிறந்த தேதி, நேரம் ஆகிய விவரங்களைக் கொடுக்கவேண்டும்.

இதுகுறித்து துணைவேந்தர் பல்ராஜ் சவுகான் கூறியுள்ள கருத்து இவர்களெல்லாம் துணை வேந்தர்களாக வந்தால் நாடு சுடுகாடாகத்தான் மாறும்.

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின் நிலை குறித்துக் கணிக்கப்படுமாம்  மாணவர்களின் கிரக நிலை சரியாக இல்லாமல் இருந்தால், அவர்கள் ஜாதகத்திற்கு ஏற்ப வண்ண மோதிரக் கல் அணியவேண்டும்.

மனோதத்துவ ரீதியாகவும் மாணவர்களின் நடத்தையை அறிகிறோம். நகத்தைக் கடிப்பது, கால் ஆட்டுவது போன்ற சுபாவம் உள்ள மாணவர்களுக்கு நம்பிக்கைக் குறைவாக இருக்கும் என எடை போடுகிறோம் என்கிறார் துணைவேந்தர்.

இந்த அடிப்படையில் எல்லாம் அணுகுவதற்கும், எடை போடுவதற்கும் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

இதற்கான விஞ்ஞான அடிப்படை என்ன? மக்களிடம் அறிவியல் மனப்பான்மையைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51- ) கூறுகிறதேலக்னோ பல்கலைக் கழகம் அரசமைப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டதா?

பா... மத்தியில் ஆட்சி செய்த காலகட்டத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி பல்கலைக்கழகங்களில் சோதிடத்தைப் பாடமாக வைக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். அந்த மிச்சசொச்சங்கள் இன்னும் ஒட்டடையாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது போலும்!

மாணவர்களின் பிறந்த நேரத்தில் குரு மற்றும் சனிகளின் நிலையை ஆராயப் போகிறார்களாம்  யார் அந்தக் குரு? இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்த அந்தக் குருவும், சனியும் யாரோ?

இவர்கள் கூறும் கிரகங்கள் முனிவர்களுக்குப் பிறந்தவை என்பதெல்லாம் எத்தகைய சிறுபிள்ளைத்தனக் கிறுக்கனின் உளறல்! ஒன்பது கிரகங்களுக்குத்தானே ஜோதிடம் சொல்லிக் கொண்டுள்ளனர்? இதுவரை மேலும் நான்கு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவே. அவைகளுக்கு சோதிடப் பலன் என்ன? நட்சத்திரமான சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளார்களே  இவர்களின் கிரகப்பலன் சரியில்லையோ!

மாணவர்களுக்கு மனோதத்துவ சோதனை தேவையில்லை தேவை  துணை வேந்தருக்கும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கும் தான்!

17.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3


நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக