இந்து மதம் ஒரு வித்தியாசமான மதம் என்று சொல்லுவார்கள். வெள்ளைக்காரன் இந்தப் பெயரைக் கொடுத்தானோ இல்லியோ, நாம் தப்பித்தோம் என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளார்.
ஆக, இந்து மதம் என்ற பெயர்கூட கிறித்துவர்களான வெள்ளைக்காரர்கள்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கிறித்துவர்களையும், முசுலிம்களையும் உண்டு இல்லை என்று கொத்திக் குதறும் இராமகோபாலன்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளவில்லை.
இந்த இந்து மதத்திற்கு வேறு பல விசேடங்களும் உண்டு; ஆண் கடவுளர்கள் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். அரிஹர புத்திரன் (அய்யப்பன்) பிறந்தது இப்படித்தான். ஆண் கடவுள்களான நாரதனும், கிருஷ்ணனும் சேர்ந்து 60 பிள்ளைகள் பெற்றுக்கொண்டதாகக் கொஞ்சம்கூட கூச்சநாச்சமின்றிக் கதை எழுதி வைத்துள்ளனர்.
இந்த அசிங்கத்தை தமிழர்கள்மீது ஏற்றி, அந்த 60 குழந்தைகளும் தமிழ் ஆண்டுகள் என்று கேவலப்படுத்தியுள்ளனர்.
நல்ல வாய்ப்பாக இந்த அசிங்கத்தை எல்லாம் மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்து தோலுரித்துக் காட்டி, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் அரும் பகுத்தறிவுப் பெரும்பணியைத் திராவிடர் கழகம் செய்துகொண்டு வருகிறது.
மேலும், ஒரு நல்வாய்ப்பாக தந்தை பெரியாரின் சீடர் ஒருவர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால், இந்த அசிங்கமான தமிழ் வருடப் பிறப்புக்குக் கல்தா கொடுத்து, தைமுதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று அறிவித்து, தமிழர்களின் தன்மான உணர்வை அரியணையில் ஏற்றிக் கவரியும் வீசியுள்ளார்.
ஆனால், இதன் விட்ட குறை தொட்ட குறையாக கேவலமான சிந்தனைகள் தமிழர்களின் சிந்தனைகளில் கூடுகட்டிக் கொண்டு குடித்தனம் நடத்துகின்றன.
ஒரு தகவல் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன் புதூர் அங்கு மழையில்லையாம்
அதற்காக என்ன செய்துள்ளனர்?
ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒரு ஆண் மன்மதனாம்; இன்னொரு ஆண் ரதியாம். ரதிக்கு மன்மதன் தாலி கட்டினானாம்.
மழை பொழிவதற்கும், பொழியாமல் இருப்பதற்கும் காரணம் என்ன என்பதை இரண்டாம் வகுப்பில் படிக்கும் ஒழுங்கான மாணவரைக் கேட்டால் விளக்கம் சொல்லிவிடுவானே!
வயதால் வளர்ந்த இந்த நெடுமரங்கள் அறிவில் குட்டையாக அல்லவா இருக்கின்றன! தேவை பகுத்தறிவு என்பதைத் தவிர இந்த நோய்க்கு வேறு மருந்து எது?
12.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக