சனி, 15 ஜூலை, 2017

நாம் இந்து அல்ல



நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் அய்யர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ``இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்?

 ``இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப் பார்த்தபிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் ``இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக்குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா

மதிதுலங்கும் விஷயங்களை விட்டு, மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதைவிட்டு, மாள வழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழிபிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் `இந்து மார்க்கத்தில், போய்ச்சேர இசைவாராஇனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்துப் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!


நூல் : ஆரியமாயை

ஆசிரியர் “ அறிஞர் அண்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக