திங்கள், 17 ஜூலை, 2017

செக்குப்பட்டி




தொலைக்காட்சிப் பெட்டி கள் எந்த ஆவியின் சக்தியாலோ, ஆண்டவனின் அருளாலோ, சாய்பாபாக்களின் கை அசைப்பாலோ ஆகாயத் தில் இருந்து வந்து குதித்தவை அல்ல அது அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்பு.

அறிவியல் கண்டுபிடித்த அந்தக் குழந்தையை மூடவியல் கத்தி கொண்டு சிதைக்கும் கொலைகாரத் தன்மையை என்னவென்று சொல்வது! விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அஞ்ஞான சாக்கடையில் குளிப்பாட்டு கிறார்களே என்ற வேதனை.

இரவு பத்து மணிக்கு மேல் நிஜம் என்ற பெயரிலும், குற்றம் என்ற தலைப்பிலும், நடந்தது என்ன? என்று சொல்லிக் கொண்டும் தொலைக் காட்சிகளில், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கைக் குப்பைகளை பூதாகரப்படுத்தி ஒளிபரப்புவதைக் காணச் சகிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டம் செக்குப்பட்டி கிராமமாம். வாகை மரத்தில் பேய் குடி கொண்டு இருக்கிறதாம். அந்தப்பேயே அப்படிச் சொன்னதாம். ஒரு வருடத்துக்கு முன் ரயிலில் அடிபட்ட ஒருவரின் ஆவிதான் அந்த ஊரில் சேட்டை செய்கிறதாம். அந்த மரத்தின் வழியாகச் சென்ற ஒரு பெண் ஆவி மிரட்டலால் சாமி ஆடினாராம். அடேயப்பா, செட் அப் பண்ணி  ஒளிப்பதிவு செய்தது போல் இருக்கிறது.

ஊடகப் பேரவையில் உரையாற்றிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் ஒரு தகவலைச் சொன்னார். அது பெரும் அதிர்ச்சிக்கு உரியது. பேய் நடமாடியதாகக் கூறப்பட்ட ஒரு ஊருக்கு  திரா விட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்கள் சிலர் சென்றபோது அந்த ஊர்க் காரர்கள் சொன்னார்களாம். நீங்களும் டி.வி.க்காரர்கள் போல ஏமாற்ற வந்திருக்கிறீர்களா? என்று கேட்டனராம். சென்ற தோழர்கள் ஆர்வத்தோடு விசாரித்த போது, ஓர் உண்மை வெளிப்பட்டது. குறிப்பிட்ட தொலைக் காட்சியின் பெயரைச் சொல்லி உங்கள் ஊரைப் பற்றி டி.வி.யில் வரவேண்டுமானால், நாங்கள் சொல்லுவது போலச் சொல்லுங்கள் என்று கூறி ஒத்திகை நடத்தி பதிவு செய்து அதன் பின்னர் அதனை ஒளிபரப்பினார்களாம். இதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?

குறிப்பிட்ட மரத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால், உடனே திராவிடர் கழகத் தலைமை நிலையத் திற்குத் தெரிவியுங்கள். கோடரி கொண்டு அந்த மரத்தினை வெட்டித் தள்ள திராவிடர் கழக இளைஞர் பட்டாளம் தயாராக இருக்கிறது.

பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா என்பது பற்றி பிரபல மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் (இவரும் டி.வி.யில் அடிக்கடி வரக் கூடியவர்தான்) என்ன கூறுகிறார்?

உலகில் ஆவி என்ற ஒன்றோ, பேய், பூதம், பிசாசு, பில்லி சூனியம் என்பதோ இல்லை. சில போலிகள் இந்தப் பொய் வியாபாரத்தைச் செய்கிறார்கள். வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டவர்களிடம் இதைச் சொல்லி பயமுறுத்தி அவர்களின் முட்டாள்தனத் தைப் பயன்படுத்தி ஏமாற்று கிறார்கள் என்று கூறினார். சொன்ன இடம் சன் தொலைக்காட்சியில் உங்களுக்காக நிகழ்ச்சியில். இவ்வளவுக்கும் டாக்டர் ருத்ரன் கருப்புச் சட்டைக்காரர் அல்லர் - ஆன்மிக வாதிதான்.

24.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக