ஞாயிறு, 16 ஜூலை, 2017

ராம் ராம்


குஜராத் மாநில நரேந்திரமோடி ஆட்சியைப்பற்றிக் கேட்க வேண்டுமானால் திருவாளர் சோ ராமசாமி அய்யரைத் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்; ஏன் எனில், வருங்காலத்தில் பிரதமராகத் தகுதி உள்ள ஒரே மனிதர் மோடிதான் என்று மூக்கால் எழுதுபவர் அவர்.

ஆனால், குஜராத் மாநிலத்திலிருந்து வரும் தகவல்கள் வேறு மாதிரியாகத் தானிருக்கின்றன. குறிப்பாகத் தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டி ஒன்றாகும். 1655 கிராமங்களில், 98 ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களிடத்திலே எடுக்கப்பட்ட தகவல் என்ன கூறுகிறது? 99 வகையான தீண்டாமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவாம்.

உயர் ஜாதிக்காரர்கள் வீட்டில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்டவருக்காக ஒரு டம்ளர் தனியே இருக்குமாம்.
அந்த டம்ளருக்குச் சூட்டப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ராம் என்பது தான்.
ஒரு வகையில் அதுவும் சரிதான். இராமனுடைய அவதாரத்துக்கு முக்கிய காரணம் வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவதுதானே!

அந்த அடிப்படையில் தானே சூத்திரனான சம்புகன் தவமிருந்தான் என்று கூறி, ராமனால் கழுத்து வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

தலைகீழாக நின்று கொண்டு தவமிருந்த சம்புகனைப் பார்த்து ராமன் கேட்கிறான்,

நீ எந்த ஜாதியில் பிறந்தவன்? நீ எவரை ஆச்ரயித்து இந்தத் தவசு செய்கிறாய்? நீ யார் பிராமணனா  சூத்திரனா? உண்மையைச் சொல் என்று கேட்கிறான்.

மகாராஜாவே நான் சூத்திர ஜாதியில் பிறந்தவன் என்றான் சம்புகன்.

அப்பொழுது ராமன் சொல்கிறான். சம்புகா! இந்த யுகத்தில் சூத்திரர்கள் தவமிருக்க அதிகாரம் பெற்றிலர்; ஆகவே உன்னை வதைப்பது என் கடமை! என்று ராமன் கூறி, கத்தியை வீசி சம்புகன் கழுத்தை வெட்டினான். அப்பொழுது தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்தார்கள். (ஆதாரம் வால்மீகி இராமாயணம் உத்தர காண்டம்  79ஆவது சருக்கம்).

இப்பொழுது சொல்லுங்கள் தீண்டத்தகாதவர் பயன்படுத்தும் டம்ளருக்கு ராம் என்று பெயர் வைத்தது சரி-தானே!

இராமாயணம் வருணாசிரமத்தின் ஆவணம்  அதில் ராமன் கதாநாயகன் என்ற பெயரில் உலவும் வில்லன்!

9.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக