ஞாயிறு, 16 ஜூலை, 2017

காமராசர் அமைச்சரவையில் இருந்த பக்தவத்சலம்


கேள்வி: பெரியாருடைய கொள்கைகளிலே நீங்கள் எந்தக் கொள்கையை மிகவும் ஆதரிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

பதில்: அவர் கொள்கைகளிலே தவறு என்று எதையும் சொல்ல முடியாது. பகுத்தறிவு தேவை என்று சொன்னால், யார்தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்? ஆனால் எது பகுத்தறிவு என்பதில்தான் கருத்து வேறுபாடு. மூடநம்பிக்கைகள் கூடாது என்ற கருத்துகள் எல்லாம் நல்ல கருத்துகள்தான். மூடநம்பிக்கைகள் கூடாது தான்.

உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்த ஒரு பேராசிரியர் - அவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் - என்னைச் சந்தித்தார். பிரான்ஸ் நாட்டிலே ஒரு கிணறு இருக்கிறது. அந்தக் கிணற்றை எல்லோரும் ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டுப் போவார்கள். அந்தக் கிணற்றைப் பார்த்தால் அழகாகிவிட முடியும் என்று ஒரு மூட நம்பிக்கை. அந்தக் கிணற்றுக்குப் பெயரே Look Well  யாரோ சொல்கிறான்; அதை எப்படியோ எல்லோரும் பின்பற்றுகிறார்கள். இங்கே கூட மரத்திலே கந்தல் துணி கட்டப்படுகிறது.

ஒருவன் கந்தல் துணியைக் கட்டினால் போதும்! உடனே அந்த மரம் முழுவதும் எல்லோரும் கட்டி விடுவார்கள். எதற்குக் கட்டினான்? இது பயித்தியக் காரத்தனமாக இருக்கிறதே என்று ஒருவரும் நினைப்பது இல்லை. பலவீன மனதுதான் இதற்கெல்லாம் காரணம்இவை எல்லாம் மறைய வேண்டியதுதான். இவைகளினால் சமுதாயத்துக்குப் பெரிய கேடுகள் கிடையாது; இருந்தாலும் ஒழிய வேண்டியதுதான். இதற்கெல்லாம் சமுதாயத்தின் அடிப்படை மாறவேண்டும்  என்பதுதான் என் கருத்து. இதில் எல்லாம் மாணவர்கள் தீவிரமாக ஈடுபடவேண்டும்.

கேள்வி: சாதி ஒழிப்புப் பற்றி?

பதில்: அதெல்லாம் நல்ல கொள்கைகள்தான்! சாதி ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் சாதி ஒழிப்பை எப்படி சட்டம் போட்டு அழிக்க முடியும்? உள்ளத்திலிருந்து அந்த எண்ணம் மறையவேண்டும்.

இப்போது பிராமணன் சாப்பிடுவதிலிருந்து எல்லாவற்றிலும் எது செய்யத்தகாததோ அத்தனையும் செய்கிறான்! எனக்கு நன்றாகத் தெரியும்; நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால், உள்ளத்தில் எது பிராமணன் உள்ளம் என்று நினைக்கி றோமோ - அதே உள்ளமுள்ளவனாக கம்யூனலாகத்தான் இருக்கிறான். எந்த பிராமணன் தன்னைத் தீவிரவாதியாகக் காட்டிக் கொள்கிறானோ அவன்தான் மற்ற பிராமணர்களை விட அதிக கம்யூனலாக இருக்கிறான். வெளியிலே வந்து, நான் எல்லாவற்றையும் விட்டு விட்டேன் என்பான். எனவே, உள்ளத்திலிருந்து அந்த எண்ணம் மறையவேண்டும்.

கேள்வி: பெரியாருடைய இயக்கத்தினால் - தமிழ்நாடு பயன் பெற்றிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: பொதுவாக ஒரு விழிப்புணர்ச்சி தமிழ் நாட்டில் பெரியாருடைய இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் காங்கிரசிலிருந்த போது பிராமணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்தார். நான் அப்போது அவரிடம் இரண்டு மூன்று முறை கேட்டிருக்கிறேன். இந்தக் கொள்கைகள் தேசியத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்று நாங்கள் சொன்னோம். அந்த இயக்கத்தின் மேல் காங்கிரஸ்காரர்களுக்கு ஒரு வெறுப்பே உண்டாகியது. ஆனால், எதைச் சொன்னாலும் உள்ளத்தில் எதை நினைக்கிறாரோ அதை அப்படியே ஒளிவு மறைவில் லாமல் சொல்வது; மேடையிலே எவ்வளவு கடுமையாகப் பேசினாலும் தனியாக சந்தித்தால் காட்டும் மரியாதை அந்த மனுஷத்தனம் இருக்கிறதே இந்த இரண்டும் அவருக்குள்ள சிறப்பு. வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுகிறாரே. அதுதான் அவர் மீதுள்ள தனி அட்மிரேஷன். அவரது கருத்தைப் பிடிக்காதவர்கள் கூட பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

கேள்வி: பார்ப்பனரல்லதார் இயக்கம் பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று சொல்ல முடியுமா?

பதில்: பிராமணர்கள் கம்யூனல்களாக (வகுப்பு வாதிகளாக) இருந்த காரணத்தினால்தான் - பிராமணரல்லாதார் இயக்கமே வந்தது! பிராமணர்களாலேயே பிராமணரல்லாதார் கம்யூனலாக வேண்டியிருந்தது. அப்போது நாங்கள் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தோம். இந்தப் பிரச்சினைகள் எல்லாம் இரண்டாம் பட்சம், - முதலில் நாட்டைவிட்டு வெள்ளைக்காரன் போகவேண்டும் என்றோம். பெரியார் இயக்கத்தால் பிராமணரல்லாத மக்கள் இன்றைக்கு ஏராளமாகப் படித்து உத்தியோகத்துக்குத் தகுதி பெற்றவர்களாக ஆகிஉள்ளார்கள்.

திரு.பக்தவத்சலம் பேட்டி (உண்மை 15_-1_-1980)

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக