ஞாயிறு, 16 ஜூலை, 2017

கடவுள் சக்தி?


கோயில்களில் உள்ள மூலவிக்ரகங்கள் பல உலோகங்களால் செய்யப்பட்டவை; அய்ம் பொன்னால் ஆனவையும் உண்டு. இந்த உருவங்களுக்கு மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு இருப்பதால்  அவை சக்தி உள்ளவைகளாகத் திகழ்வதாக ஆன்மீகவாதிகள் அள்ளி விடு-வார்கள்.

ஒவ்வொரு கோயிலுக்கும் திவ்விய தல புராணங்களையும் எழுதி வைத்துள்ளனர். ஆண்டவனே நேரில் தோன்றி ஆசீர்வதித்ததாக வெல்லாம் மூட்டை மூட்டையாக எழுதிக் குவித்துள்ளனர். ஆனால் நடப்புகள் என்னவோ அவற்றிற்கு நேர் எதிராகவே உள்ளன.

சிதம்பரம் நடராஜக் கடவுளை பீஜப்பூர் சுல்தான் படைக்கு அஞ்சி 37 ஆண்டுகள் கடத்திக் கொண்டுபோய் பாதுகாப்பாக வைத்-திருந்தது போலவே, பூலோக சொர்க்கமாகிய திருவரங்கத்து ரெங்கநாதன் சிலையையும் கடத்திக் கொண்டு போய்ப் பாதுகாத்தனர் என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்தான்.

டில்லி துருக்கிப் படை ஒன்று உலுக்கான் (பின்னர் அவர்தான் முகம்மது துக்ளக்) தலைமையில் தென்னிந்தியாவை நோக்கிப் படைகள் வந்தன. அவர்களின் குறியெல்லாம் கோயில்களில் குவிந்துகிடக்கும் பொற்குவியல்கள்தான்.

திருவரங்கம் நோக்கிப் படை வருகிறது என்று கேள்விப் பட்டவுடன் சிறீங்கம் சிறீரங்கநாதக் கடவுளின் பக்தர்களுக்குக் கிலி பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

ரெங்கநாதனின் சிலையை பிள்ளை உலகாசிரியர் என்பவர் (வைணவ மதத்தில் பெரிய மகானாகப் போற்றப்படும் வேதாந்த மகாதேசிகன்) எடுத்து தெற்கு நோக்கிப் போய்விடுவது என்றும் இன்னொரு கோஷ்டியினர் நாச்சியார் விக்ரகத்தை வேறு திசையில் எடுத்துப் போய்விடுவது என்றும் முடிவு செய்து அவ்வாறே செய்தனர்.

தென்னாட்டிற்கு வந்த துருக்கியர்கள் மதுரையில் ஒரு சுல்தான் ராஜ்ஜியத்தை நிறுவினர்.

அந்தக் காலகட்டத்தில் திருவரங்கம், திருப்பதி, மதுரைக் கோயில்கள் எல்லாம் இழுத்து மூடப்பட்டுவிட்டன.

விஜயநகர ராஜ்ஜியம் உருவான காலகட்டத்தில் பிரதாணி கோபணா என்பவர் செஞ்சி வரை எல்லையை உருவாக்கினார். தேசிகர் திருவரங்க ரெங்கநாதன் விக்ரகத்தை செஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்-தார். மேலும் படையைப் பெருக்கி மதுரைவரை படையெடுத்து சுல்தான்களை முறியடித்த பின்னர்தான் 50 ஆண்டு காலமாக மூடிக்கிடந்த மதுரை மீனாட்சி கோயில் திருவரங்கம் கோயில், மற்றும் நூற்றுக்கணக்கான கோயில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. (ஆதாரம்: மணியன் நடத்திய ஞானபூமி இதழில் வேணுகோபாலன் எழுதிய கட்டுரை ஆகஸ்டு 1983)

சிதம்பரம் நடராஜன், திருவரங்கம் ரெங்கநாதன், மதுரை மீனாட்சி, திருப்பதி ஏழுமலையான் சக்திகள் இந்த யோக்கியதையில்தான் இருந்தன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகும் கடவுள் சக்தி, வெண்டைக்காய், புடலங்காய் என்பதெல்லாம் அசல் புஸ்வாணம், வெத்து வேட்டு என்று புலப்படவில்லையா?

16.6. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக