ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆனால்...


இந்திய அஞ்சல் துறை, நாடு முழுவதும் அஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. இத்திங்கள் 14 அல்லது வரும் ஞாயிறு அன்று அப்போட்டி நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு வட்டாரத்தில் சென்னை, பாண்டிச்சேரி, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோவை மற்றும் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட உள்ளது.

4ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்  மாணவிகள் இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். தேசிய அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம்; இரண்டம் பரிசு ரூ.6 ஆயிரம்; மூன்றாம் பரிசு ரூ.4000 ஆயிரம் அளிக்கப்பட இருக்கிறது.

வரவேற்கத்தகுந்த போட்டி இது. ஓவியக் கலையை மாணவர்கள் மத்தியில் போற்றி வளர்க்கவேண்டியது மிகவும் அவசியம். கணினி சகாப்தத்தில் உண்மையான கைத்திறன் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. இந்த வகையில் ஓவியக் கலைக்கு ஊக்கம் கொடுப்பது வரவேற்கத்தக்கதே!

ஆனால்... ஆனால் என்னும்... மணி ஓசை வந்தாலே பின்னாலே ஆபத்து என்கிற யானை வருவதாகத்தானே அர்த்தம்!

எத்தகைய ஓவியங்கள்? அதுதான் பிரச்சினையே!

``எனக்குப் பிடித்த புராண காலத் தலைவர்! அல்லது எனக்குப் பிடித்த வனதேவதையின் கதை என்ற தலைப்பில் அஞ்சல் தலை ஓவியப் போட்டியாம்!

அஞ்சல் துறைக்குக் கிறுக்குப் பிடித்துள்ளதா? ஏற்கெனவே மக்கள் மத்தியில் அஞ்சல் துறையின் மரியாதை சரிந்துபோய் தனியார் `கொரியர் ஓகோ என்று கோலோச்சுகிறது. இந்த இலட்சணத்தில் மாணவர்கள் மத்தியில் புராண உணர்வை வளர்ப்பதுதான் அஞ்சல் துறையின் வேலையா? இதுதான் மதச் சார்பின்மையின் சித்தாந்தமா?

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்பது இப்படித்தானா?

பா..., ஆட்சியில் புராண நாயகனான ராமனைத் தூக்கிப் பிடித்து நிறுத்தினர் என்றால், மதச்சார்பற்ற ஆட்சியை நிறுவுவதாகத் தம்பட்டம் அடித்த இந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (ருஞஹ) ஆட்சியில், புராண காலத் தலைவர் என்கிற திரை யைத் தூக்கிப் பிடித்து அதில் ராமன் பட்டாபிசேகத்தை நடத்தப் போகிறார்களா?

சிறுவயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடிய கிருஷ்ணன் புராண நாயகன்தான்! இதற்குத்தான் அடியெடுத்துக் கொடுக்கிறார்களா?

அடுத்து வன தேவதையாம். அது என்ன தேவைதையோ! வெட்கக்கேடு!

தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் (மதச்சார்பின்மை) இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்  செய்வார்களா?

12.11.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக