ஞாயிறு, 16 ஜூலை, 2017

கொலைக் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்ற முயன்ற அய்யங்கார்கள்




- டி.எஃப்.காரக்கா


ஜாதி பாசமும், ஜாதிக் குறியீடுகளும் இந்திய சமூக வாழ்க்கையிலும், மக்களின் வாழ்க்கையிலும் மிக ஆழமாகப் பதிந்து போனவை யாகும். அதுவும் தென்னிந் தியப் பார்ப்பனர்களே அதிக அளவில் இத்தகைய உணர் வைப் பெற்றிருப்பவர்கள் ஆவர். நமது சுதந்திர நாட்டின் அடித்தளத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகத் தோன்றினாலும் சரி, தங்களின் ஜாதி வெறியை விடாமல் அவர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருப்பார்கள்.

இத்தகைய ஜாதி அபிமானம், ஜாதி வெறி எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்தவர் களையும் எவ்வளவு கீழ்த் தரமாக நடந்து கொள்ளச் செய்தது என்பதை வெளிப்படுத்தும் விதமான நிகழ்வு ஒன்று பெங்களூரில் நடந்தது.
மைசூர் சம°தானத்தின் தலைமை நீதிபதியாக பெங்களூர் நீதிமன்றத்தில் இருந்தவர் குடகு நாட்டைச் சேர்ந்த நீதியரசர் பி.மேடப்பா. நேர்மையும், நாணயமும் மிகுந்த அவரைக் கொலை செய்ய 29-1-1951 அன்று ஒரு முயற்சி நடந்தது. அவர் அருந்த இருந்த தேநீரில் நஞ்சு கலக்கப்பட்டது;

 ஆனால் நல்வாய்ப்பாக அவரது பணியாளர்கள் தேநீரின் நிறம் மாறியிருப்பதைக் கண்டு அதை அவருக்குக் கொடுக்காமல் கீழே ஊற்றிவிட்டார்கள். அது பற்றி அவரிடம் தகவலும் கூறினார்கள். தேநீர் கொண்டுவரப்பட்ட பாத்திரத்தில் இருந்த சிறிதளவு தேநீர் சோதனைச் சாலைக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட போதுதான் அதில் மெர்குரி ஆக்சைட் என்னும் நஞ்சு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பேரில் நீதியரசர் மேடப்பா காவல்துறையில் புகார் அளித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரு வேலைக்காரி அந்த நஞ்சை தேநீரில் கலந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவில்,  எல்.எ°.ராஜூ என்ற மைசூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த ராஜூவின் பின்னணியைத் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். 1949-50களில் மைசூர் சமஸ்தானத்தில் கோபால் ராவ் என்ற ஒருவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறியதையடுத்து பேராசை கொண்ட மக்கள் அந்த நிறுவனத்தில் பணம் போடத் தொடங்கினார்கள். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் இரண்டு லட்ச ரூபாய் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். மேலும் மைசூர் மகாராஜாவின் நெருங்கிய உறவினர்கள், முந்தைய மகாராஜாவின் செயலாளர் தம்பு செட்டியார் போன்ற பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் இந்த கோபால் ராவிடம் பணம் முதலீடு செய்து ஏமாந்தார்கள்.

எட்டு கோடி ரூபாய் வரை வசூல் செய்த பிறகு கோபால் ராவ் மஞ்சள் நோட்டி° கொடுத்து தான் திவால் ஆகிவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரிடம் உள்ள சொத்துகளை மதிப்பிட்டு, அதன்படி பணம் கட்டியவர்களுக்கு ரூபாய்க்கு 3 காசு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மைசூர் அரசாங்கம் ஒரு நியாயமான இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியதால், சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி, தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவியது. நீதியரசர் மேடப்பாதான் இந்த தனிநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். மைசூர் அரசாங்கமும், நீதிமன்றமும் மேற்கொண்ட முயற்சிகளினால் கோபால் ராவிடம் பணம் கட்டியவர்களுக்கு ரூபாய்க்கு 6 அணா திரும்பக் கிடைத்தது.

இந்த வழக்கில் கோபால் ராவுக்காக ஆஜரான வழக்கறிஞர் இந்த ராஜூதான்.  கோபால் ராவின் மீதான வழக்கு அவருக்கு எதிராகப் போவதைக் கண்ட ராஜூ ஓடிச்சென்று பத்திரிகைகளில் கட்டுரை எழுதி வெளியிட்டார். இக்கட்டுரைகள் நீதிமன்றத்தை அவமதிக்கும் முறையில் இருந்தன என்பதால், அவர் மீது வழக்கு தொடர்ந்து அவருக்கும், பத்திரிகையாளருக்கும் சிறைதண்டனை வழங்கப்பட்டது.

இதில் வியப்பான செய்தி என்னவென்றால், ராஜூவின் சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டு, அவர் என்று கைது செய்யப்பட்டாரோ அன்று இரவு 10 மணிக்கு விடுவிக்கப்பட்டார் என்பதுதான்.  இதற்கு ஆட்சி அதிகாரத்தில் இருந்த செல்வாக்கு மிகுந்தவர்களின் உதவிதான் காரணம் என்று தெரிய வந்தது. அவர் வேறு யாருமல்ல. இந்திய அரசில் உள்துறை அமைச்சராக இருந்த சாட்சாத் ராஜகோபாலாச்சாரியார்தான். ராஜூவும், ராஜாஜியும் நாமம் போட்டுக் கொள்ளும் அய்யங்கார்கள் என்பதும், ராஜூ ராஜாஜியின் நெருங்கிய உறவினர் என்பதும்தான் இந்த தலையீட்டுக்கான காரணம்.

அடுத்து உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் மகளான லட்சுமியின் மைனர் சொத்துகளுக்குப் பாதுகாவலராக இந்த ராஜூ இருந்தார். சொத்து கணக்குகளை சரியாக கொடுக்காமல் ஏமாற்றி ராஜூ பெரும் அளவு பணம் கையாடிவிட்டார் என்று அந்த அம்மையார் புகார் அளித்ததன் பேரில் மறுபடியும் கைது செய்யப்பட்ட ராஜூவுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கொண்டு அவர் மேல்முறையீடு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த விஷயங்களில் ராஜூ செய்த குற்றங்களைப் பற்றியோ அவருக்குக் கிடைத்த தண்டனைகள் பற்றியோ நமக்கு சிறிதும் அக்கறையோ, கவலையோ இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ராஜூ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, நாட்டில் உள்ள செல்வாக்கு மிக்க சிலர் அவருக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருப்பதைத்தான் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

இவ்வாறு தண்டிக்கப்பட்ட ஒருவர் மீது இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருப்பவரும், முன்பு கவர்னர் ஜெனரலாக இருந்தவரும் இந்த அளவுக்கு விசேட அக்கறை எடுத்துக் கொள்வதில்தான், ஜாதி மற்றும் ஜாதிச் சின்னங்களும் ஜவகர்லால் நேருவின் மதச்சார்பற்ற இந்திய நாட்டில் எந்த அளவுக்குச் செல்வாக்கு பெற்றுள்ளன என்பது பற்றிய வருந்தத்தக்க, நற்சுவையற்ற, மோசமான கதை அடங்கி இருக்கிறது.

இங்கே அய்யங்கார் என்பதன் பொருளைப் புரிந்து கொள்வது அவசியம். அய்யங்கார் என்பவர்கள் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்; விஷ்ணுவை வழிபடுபவர்கள். இந்து மதத்தின் மூன்று மேல்ஜாதிப் பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்த இவர்கள் ராமானுஜரின் தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள். தென்னிந்தியாவில் அய்யங்கார் என்பது ஒரு ஜாதி மட்டுமல்ல; அதற்கும் மேல் வெறியுணர்வு கொண்டவர்கள் அவர்கள். ஆனால் தங்கள் செயல்பாடுகளை எல்லாம் மிகவும் ரகசியமாக, வெளியில் தெரியாமல் செய்து கொள்வார்கள். அவர்களின் ஜாதிச் சின்னமாக 111 என்றது போன்று மூன்று கோடுகளை நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஓரங்களில் இருக்கும் கோடுகள் சுண்ணாம்பாலும் நடுவில் உள்ள கோடு செம்மண்ணாலும் இடப்படுவதாகும்.

அய்யங்கார் என்பவர் தவறே செய்யமாட்டாராம். அப்படியே ஏதாவது தவறு செய்தாலும், தவிர்க்க முடியாத காரணங்களால்தான் செய்திருப்பாராம்; அதனால் அவருக்கு பெரிய தண்டனை எதுவும் அளிக்கப்படக்கூடாதாம்.  இவ்வாறு மனுதர்மத்தில் கூறப்பட்டுள்ளதாம்.

தான் ஒரு உயர்பிறப்பாளன் என்று நம்பும் அய்யங்கார் ஜாதிகள் ஒழிந்து சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காக நாட்டில் போராடும் ஜனநாயக நடைமுறைகளில் நம்பிக்கை அற்றவர்.

ராஜூவின் வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் மிக முக்கியமான பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் அய்யங்கார்களாக இருந்ததுதான் பெரிய ஆச்சரியம். மத்தியில் உள்துறை அமைச்சர் ராஜகோபாலாச்சாரியார். அவரது செயலாளர் எச்.வி.ஆர்.அய்யங்கார். சம°தானத்தின் அமைச்சர் கோபால்சாமி அய்யங்கார். அவரது செயலாளர் வெங்கடாச்சார். அவர்கள் அனைவரையும் விட ஜாதி வெறி பிடித்தவராக இந்தியத் தலைநகரில் இருந்தவர் நாடாளுமன்ற உதவி சபாநாயகராக இருந்த அனந்தசயனம் அய்யங்கார்தான்.
அரசமைப்பு சட்டத்தின் 371 ஆவது பிரிவை குடியரசுத் தலைவர் பயன்படுத்தி, மேடப்பாவைக் கொல்ல முயன்ற ராஜூவின் வழக்கை பம்பாய் அல்லது சென்னை செஷன்° நீதிமன்றம் ஒன்றிற்கு மாற்ற மைசூர் அரசுக்கு ஆணை பிறப்பித்ததன் பின்னணியில், டில்லியில் அரசு செயலகங்களில் கும்பல் கூடியிருந்த அய்யங்கார்களின் திருவிளையாடல்களைப் பற்றி இங்கு குறிப்பிடவேண்டியது மிகமிக அவசியமாகும். இந்திய அரசின் சட்டங்களை மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் சம°தானங் களுக்கும் செல்லுபடியாக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கும் அரசமைப்பு சட்டப் பிரிவு இது.

ஒரு கொலைக் குற்றம் சாட்டப்பட்ட தனிப்பட்ட ஒருவரின் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிப்பது தேவைதானா? என்பதுதான் இப்போது நம் முன் உள்ள கேள்வி.

நமது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 527 ஆவது பிரிவும் இவ்வாறு ஒரு வழக்கை வேறுமாநிலத்திற்கு மாற்ற மாநில அரசை அனுமதிக்கிறது. ஆனால் அதனை மாநில அரசு செய்திருந்தால் பிரச்சினையில்லை. இதனை மத்திய அரசு செய்ய வேண்டிய அவசியமென்ன?

நாம் பெரிதாக மதிப்பு வைத்திருக்கும் இரண்டு பெரிய மனிதர்கள், ராஜகோபாலாச்சாரியாரும், அனந்தசயனம் அயயங்காரும், இந்த விஷயத்தில் இவ்வாறு செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவதே நமக்கு பெரிய அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இதைத்தான் ரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது என்று கூறுகிறார்களோ!

இந்த விவகாரத்தில் அனந்தசயனம் அய்யங்கார் புரிந்த திருவிளையாடல் சொல்லத் தரமற்றது. அவரும் ஒரு வழக்கறிஞர்தான். ராஜூவின் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் வாதாடியிருந்தால் யாரும் குறை கூறப் போவதில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் மற்றும் மைசூர் அமைச்சர்களின் ரகசிய கூட்டம் ஒன்றில் அனந்தசயனம் அய்யங்கார் ராஜூவுக்காக வாதாடியிருக்கிறார். இதற்காக ராஜூ அனந்தசயனம் அய்யங்காருக்குப் பணம் கொடுத்திருக்கிறார். எவ்வளவு கொடுத்தார் என்பது தெரியவில்லை.

பெங்களூர் பசவன்குடி தபால் நிலையத்தில் இருந்து 20-1-51 அன்று ரசீது எண். 1002 மூலமாக ராஜூ ரூ. 600 அய் அனந்தசயனம் அய்யங்காருக்கு பண அஞ்சலில் அனுப்பி இருக்கிறார். அந்த பண அஞ்சல் 22-1-51 அன்று 12 மணி 5 நிமிட நேரத்தின்போது டில்லி ஜ°பத்ராய் தபால் நிலையம் மூலம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதனை அனந்தசயனம் அய்யங்கார் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். அந்த தந்தியில், “கடிதத்தைப் பார்க்கவும். மீதி பணத்தை அனுப்பி வைக்கிறேன்” என்ற வாசகம் இருந்தது. ராஜூவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில், ஒரு வழக்கைத் திரும்பப் பெறவோ, நீதிமன்றத்தை மாற்றவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில்  குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 527 ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவர அனந்தசயனம் அய்யங்காரை ராஜூ கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கில் தான் அனந்தசயனம் அய்யங்காருக்காக ரூபாய் 5000 க்கும் மேல் செலவு செய்திருப்பதாக ராஜூ கூறியதாக ஒருவர்  நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியம் அளித்திருந்தார். இந்த வழக்கைப் பற்றிய செய்தியுடன் இதுவும் நாளிதழ்களில் வெளிவந்திருந்த போதிலும் அனந்தசயனம் அய்யங்கார் இதனை மறுக்கவில்லை. அதனால் அவர் மீது கூறப்பட்ட குற்றங்கள் பொய்யானவை அல்ல என்று உறுதியாகிறது.

மத்திய அரசின் சட்டங்கள் மன்னர்களின் சம°தானங்களுக்கும் செல்லும் என்ற ஒரு சட்டதிருத்தத்தை ராஜாஜி அறிமுகப்படுத்த முயன்று கொண்டிருந்த நேரத்தில்தான்,  குற்றவியல் தண்டனைச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை அனந்தசயனம் அய்யங்கார் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறார். இந்த திருத்த மசோதாவை ராஜகோபாலாச்சாரி அய்யங்காரும் ஏற்றுக் கொள்கிறார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைப் பெரிய பிரச்சினையாக எழுப்பியபோது, ராஜாஜி திருத்த மசோதாவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார். ஆனால் உறுப்பினர்கள் அதனை அனுமதிக்காமல், அதனை வாக்கெடுப்புக்கு விடவேண்டும் என்று வலியுறுத்தி, வாக்கெடுப்பில் அதனைத் தோற்கடித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இருக்கும் சட்ட அம்சங்கள் பற்றி நமக்கு அக்கறையில்லை. ஆனால், நாட்டின் சட்டத்தையே தனது அய்யங்கார் ஜாதியைச் சேர்ந்த ஒரு தனி மனிதனுக்காக, சட்டத்திற்கும், நியாயத்துக்கும், ஒழுக்கத்துக்கும் புறம்பான முறையில்  மாற்ற முயன்ற இரண்டு அய்யங்கார்கள் தங்கள் செல்வாக்கையும், அதிகாரத்தையும் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

ராஜூவின் வழக்கை விசாரிப்பதற்கு மேடப்பாவுக்கு பதிலாக வெளி மாநிலங்களிலிருந்து ஒரு நீதிபதியைக் கொண்டு வந்து நியமிப்பது என்று மைசூர் முதல் அமைச்சரும் மத்திய அரசும் ஒப்புக் கொண்டதன் பேரில், குடியரசுத் தலைவர் மைசூர் அரசுக்கு பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டது.

(D.F. காரக்கா மும்பையிலிருந்து வெளிவந்த ‘கரண்ட்’ என்ற ஆங்கில இதழில் எழுதிய ““CASTE MARK”” (17.11.1951) என்ற கட்டுரையின் மொழியாக்கம் இது. தமிழில் த.க.பாலகிருஷ்ணன்

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக