திங்கள், 17 ஜூலை, 2017

காஞ்சி வழி?




காஞ்சி சங்கர மடத்தின் ஆசீர்வாதத்தோடும், ஆதர வோடும் ஒரு பத்திரிகை நடந்து வருகிறது. அதன் பெயர் காமகோடி. இம்மாத இதழில் 37 ஆம் பக்கத்தில் ஒரு கட்டுரை.

ஹிந்து மதத்திற்கு ஒரு பாராட்டு - காஞ்சி காட்டிய வழியில் குஜராத் என்பது கட்டுரையின் தலைப்பு.

தலைப்பைப் பார்த்து ஆர்வமுடன் படித்தோம். குஜராத்தின் ஆமதாபாத் மாவட் டத்திலுள்ள ஜஞ்ஜர்கா மத மாற்சரியம், ஜாதிச் சண்டைகள் இல்லாத நகரம். அங்கிருக்கும் ஸ்ரீகிருஷ்ணன் கோயிலில் பூஜைகள் செய்வது, பொதுவாக நடைமுறையில் உள்ளதுபோல், ஒரு பிராமணர் அல்ல. மாறாக, மகராஜ் பல்தேவ் தாஸ்ஜி என்ற தலித் ஒருவர்தான் தலைமைப் பூசாரியாக இருக் கிறார். குஜராத்தில் கிராமப் பகுதிகளில் தீண்டாமைப் பிரச்சினை முற்றிலுமாக அகலாத நிலையில், ஒரு தலித் அந்தக் கோயிலில் பூஜைகளுக்குத் தலைமையேற்று நடத்தி வைப்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதி வாழ் மக்கள், குறிப்பாக மேல் வகுப்பினர்கள் எனக் கருதப் படும் பிராமணர்கள், க்ஷத் திரியர்களாகிய ராஜபுத்திரர்கள், வைசியர்களான பனியாக்கள், செல்வாக்கும் வலிமையும் மிக்க பட்டேல்கள்  ஆகிய அனைத்துப் பிரிவினருமே அக்கோயிலுக்கு வந்து, தலித் தான பூசாரியின் பாதங்களைப் பக்தியுடன் தொட்டு வணங்கி ஆசிகள் பெறுகின்றனர். இரண்டு நூற்றாண்டுகால மாக தலித்துகளே பூசாரிகளாக இருந்து வருவது சிறப்பான விஷயம்.

இங்கு வழிபட வருவோரிடம் இந்த ஆலயத்தின் தாக்கம் அதிகமிருப்பதால், இப்பகுதி எங்குமே ஜாதி காரணமான பாரபட்சம் கிடையாது. பல்தேவ் தாஸ்ஜி உயர் ஜாதிக் குடும்பங்களுக்குக்கூட ஆன்மீக வழிகாட்டியாக இருக்கிறார் என்று இந்தியா டுடேயில் வந்த ஒரு தகவலை காமகோடி எடுத்து வெளியிட்டு, காஞ்சி காட்டிய வழியில் குஜராத் என்ற தலைப்புக் கொடுத்ததுதான் விசேஷத்திலும் விசேஷம்!

காஞ்சி மடமோ, காஞ்சி சங்கராச்சாரியார்களோ, தீண்டாமையை அனுசரிக் காதவர்களா? காந்தியார் 16.10.1927 அன்று பாலக்காட்டில் மாட்டுக் கொட்டகையில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைச் சந்தித்துத் தீண்டாமை ஒழிப்புக் குறித்து உரையாடு கையில், சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாஸ்திரங்களையும், பழைய வழக்கங்களை யும் நம்பி இருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகும் என்றும் கூறிடவில்லையா? (ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தியார் பக்கம் 575-576).

குஜராத் கோயிலில் தாழ்த் தப்பட்டவர் அர்ச்சகர்- காஞ்சி வழி என்பது இதுதானா?

குஜராத்தில் தலித் பூசாரி இருப்பது காஞ்சி வழி என் றால், அதனைத் தமிழ்நாட்டில் கொண்டுவரும்போது சங்கராச்சாரியாரின் சிபாரிசில் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களின் இரட்டை நாக்கு என்பது!

21.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக