எஸ்.பி.
குட்டி என்பவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி. ஓய்வுக்குப்பின் சங்பரிவார்க் கூட்டத்தில் கரைந்தவர். பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவராகக் கூட இருந்தவர். பகவத் கீதையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்றெல்லாம்கூட சொல்லப்படுவதுண்டு.
இவர் அண்மையில் ஒரு நூலை எழுதியுள்ளார். நூலின் பெயர் அறிவுக்கு எட்டிய கடவுள் என்பதாகும்.
இவர் காவிக்கொள்கை கொண்டவர் - ஆர்.எஸ்.எஸ்.,
இந்து முன்னணி, பி.ஜே.பி.
முதலிய அமைப்புகளில் இருந்தாலும், இப்பொழுது எழுதியுள்ள அந்த நூலில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு சங்பரிவார் வட்டாரத்தைக் கதி கலங்கச் செய்துவிட்டார்.
அப்படி என்னதான் எழுதி விட்டார்?
ராமாயணத்துக்கும், இலங்கைக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.
வால்மீகி எந்த இடத்திலும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ஆகிய பெயர்களைக் குறிப்பிட வேயில்லை.
ராமர் பாலம் ராமேசுவரத்தில் கிடையவே கிடையாது! என்று அறிவுக்கு எட்டிய கடவுள் என்ற நூலிலே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது காவிக் கூட்டத்தை வெறிப் பிடிக்கச் செய்துவிட்டது. இந்தநூல் வெளியிட்ட நாளன்று, நாகர்கோயிலில் இவர் வீட்டின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளலாமே!
இவ்வளவுக்கும் இவர் இந்த சங்பரிவார்க் கூட்டத்தில் காவி அணிந்து திரிந்தவர்தாம்; இப்பொழுதுகூட இவர் கழுத்தைச் சுற்றி காவித்துண்டுதான். ஆனாலும், தன் அறிவுக்குப் பட்டதைச் சொன்ன காரணத்தால் - இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
இப்பொழுதாவது அவர் உணர்ந்தால் சரி,
தான் முன்பு இருந்த கூடாரத்தில் அறிவுக்கு இடம் இல்லை; அழிவுக்குத் தான் இடம் உண்டு; நெறிக்கு இடமில்லை, மாறான வெறிக்குத்தான் அங்கே தட்டுத் தாம் பூலம் என்பதைப் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம்.
பவளப் பாறையை பாலம் என்று சொல்லலாமா? இந்தப் பவளப் பாறைகள் உலகின் பல இடங்களிலும் இருக்கின்றனவே. ராமேசுவரத்தில் - இந்தப் பவளப் பாறையை ராமன் கட்டினான் என்றால், உலகில் வேறு கடல் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகளைக் கட்டியவன் யார்?
என்ற அறிவார்ந்த வினாக்களை எல்லாம் எழுப்பி இருக்கிறோம். எந்த முனையிலிருந்தும் பதில் இல்லை. இப்பொழுது அவர்கள் தரப்பிலிருந்தே குரல் ஒலித்திருக்கிறது.
மக்கள் வளர்ச்சிக்கான ஒரு திட்டம் கேவலம் இதிகாச, புராண கற்பனைக் கதாபாத்திரமான ராமனை முன்னிறுத்தி முடக்கப்படுகிறது என்றால், இதற்கு உச்சநீதி மன்றமும் ஏதோ ஒரு வகையில் துணை போகிறது என்றால், இது நாடா
- காடா என்ற கேள்வியைத்தான் எழுப்பத் தோன்றுகிறது.
பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் திராவிட என்ற வில்லையை ஒட்டிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அம்மையாரும் ராமனுக்காக வக்காலத்து வாங்கி நீதிமன்றம் செல்லுகிறார் என்றால், இந்தக் கொடுமையை என்னென்று சொல்ல! மதம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
10.9. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக