ஆரியத்துக்கு முன்பு இந்தியாவின் நிலை என்ன? ஆரிய முறையால் தமிழருக்கு நேர்ந்த அவதி,
தமிழர்கள் எதிர்த்த வரலாறு, அவர்கள் வாழ்க்கை நிலை இவைகளைப் பண்டைய ஆராய்ச்சி மூலம் சிறிது காலவரையறையுடன் கீழே காட்டப்பட்டிருக்கிறது. இவை,
சரித்திராசிரியரான தோழர் பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923-இல் பதிக்கப்பட்டுள்ள ``இந்திய சரித்திரம் முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள்.
கி.மு. 5000 வரை இந்தியாவின் நிலை:
``ஆரியம் பரவுவதற்குமுன், இந்தியாவில் நான்கு வருண முறை அனுஷ்டிக்கப்படவில்லை. வடஇந்தியாவில் பேசப்பட்ட பாஷைகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சமஸ்கிருதத்தில் கடன் வாங்கியதாலும், தென் இந்தியா சமஸ்கிருதத்துக்கு அடிமைப்படவில்லை. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் பேசிவந்த பாஷை,
இப்போது கோதாவரி, வங்கம், விசாகப்பட்டினம் முதலிய இடங்களில் வசிக்கும் அதிக கல்வியறிவில்லாத மக்கள் பேசும் பாஷையாக இருந்திருக்க வேண்டும். அதனுடைய நாகரிக உருவந்தான் தமிழ் என்பது
இரும்புக் கருவிக் காலம், கி.மு. 5000 முதல் 3000 வரை:
``சமஸ்கிருதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்துமுன்பு, தமிழ் பாஷையிலிருந்து இந்த நாட்டின் பண்டைய வாழ்க்கையைச் சித்திரித்து விடலாம். அக்காலத்தில், நால்வகை நில (முல்லை, நெய்தல், மருதம், குறிஞ்சி) மக்களே வாழ்ந்தார்கள். கிறிஸ்து சகாப்தம் ஆரம்பமாகும் பல ஆயிர வருடங்களுக்கு முன்,
தென்னிந்தியாவிலிருந்து குடியேறியவர்கள்தான் (திராவிடர்), சால்தியன் (தற்பொழுது ஈராக் எனப்படும் பிரதேசங்கள்) நாகரிகத்துக்கு ஆதிகர்த்தாக்கள் என்று பல பாஷா பண்டிதர்கள் நினைக்கிறார்கள். பிரேத்தை எரிக்கும் வழக்கம், ஆரியம் பரவியதற்குப் பிறகு ஏற்பட்டது; அம்மக்கள் (ஆரியரல்லாதார்) இமய முதல் குமரிவரையிலும் சிந்து (நதி) முதல் பிரம்மபுத்ரா (நதி)
வரையிலும், பரவிக்கிடந்தனர்.
ஆரியக் கோட்பாடு, கி.மு. 3000 முதல் 1500 வரை:
``இக்காலத்தில்தான் தெய்வ வழிபாடு, புதிய முறையொன்றை அடைந்தது. நெருப்பின் மூலம் கடவுளைத் தொழுதலே அம்முறை. இதை ஒப்புக்கொண்டவர்கள் ஆரியர்கள் என்றும், ஒப்புக்கொள்ளாதவர்கள் தஸ்யூக்கள் (திராவிடர்கள்) என்றும் ஆனார்கள். தேவ பாஷையாகிய சாண்டாசா (சமஸ்கிருதம்) பாஷையைத்தான் இந்தோ அய்ரோப்பிய பாஷையெனக் கூறுகிறார்கள்.
``இந்த அக்னி வழிபாட்டையும் புதிய பாஷையையும் வடமேற்குக் கணவாய் வழியாய் இந்தியாவிற்கு வந்த அன்னியர்தாம் (ஆரியர்) கொண்டுவந்தார் என அய்ரோப்பியப் பண்டிதர்கள் சொல்லுகிறார்கள். ஆனால் இவை, பிரயாகை (அலகாபாத்)யில் உண்டாயிற்று என்றுதான் தெரிகிறது.
கி.மு. 3000 முதல் 2000 வரை:
``பர்க்கவாஸ், அகஸ்தியர் என்ற இரு ஆரியப் புரோகிதக் குடும்பங்கள்தான், தென்னிந்தியாவுக்கு ஆரியக் கலைகளைக் கொண்டுபோய்ப் பரவச்செய்தன.
``மலையாளத்தில், பிராமண காலனி (குடியேற்றம்) யும் உண்டாயிற்று. இராமாயண காலத்தில் (கி.மு.
2000) தென் இந்தியா, தஸ்யூக்களின் அல்லது ராக்ஷதர்களின் (திராவிடர்) பலமான கோட்டையாக இருந்தது. அவர்கள் ஆரிய முனிகளின் யாகக் கிருத்தியங்களுக்கு விரோதமாக இருந்தார்கள். அந்த ராக்ஷதர்கள் (திராவிடர்), வட இந்தியரைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்களாயில்லை. இக்காலத்தில், தென் இந்தியாவில் பல ராக்ஷச ராஜ்யங்கள் இருந்தன. இவற்றுள் பெரியது, கோதாவரி பள்ளத்தாக்கிலிருந்த ஜனாஸ்தானா என்ற ராஜ்யமாகும். டெக்கான் காடுகளென்னும் தண்டகாரண்யத்தில் (விந்திய மலைக்குத் தெற்கேயும், திருவேங்கிட மலைக்கு வடக்கேயுமுள்ள பிராந்தியமாகக் கொள்ளலாம்)ஆரியர்களின் கொள்கைகள் பரவுவதைத் தஸ்யூக்கள் வெறுத்தனர்.
``வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என்பது, யாகங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. விந்திய மலைக்கு வடக்கேயுள்ள பகுதியைப் புண்ணிய பூமியாகக் கருதி, அதற்கு ஆரிய ரிஷிகள் ஆரிய வர்த்தனம் என்று பெயரிட்டனர். அவர்களுக்கு விரோதமானவர்களை, அந்த ரிஷிகள் தக்ஷணபாதாவுக்குத் (ஆரிய ஆதிக்கமில்லாத தண்டகாரண்யப் பிரதேசங்களுக்கு) துரத்தினர். தென் இந்தியாவிலுள்ள தஸ்யூக்கள் (திராவிடர்), பேர்பெற்ற வியாபாரிகள். அவர்களை ரிஷிகள், பணிக்கர் என்று அழைத்தார்கள். ஆரியர் வகுத்த நான்கு வர்ணங்களையும் சேராதவர்கள் தஸ்யூக்கள் எனப்படுவர்.
மகாபாரத காலத்திற்குப்பின் கி.மு. 1400 - 750
``கி.மு.
1500-இல், பிராமணர்களின் நான்கு ஆச்சிரமக் (பிரம்மச்சாரிய, கிருகஸ்த, வானப்பிரஸ்த, சந்யாச நிலை)
கொள்கை தலைநீட்டியது. பிராமணர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு அற்ற மோக்ஷதானம் உண்டு என்ற கொள்கையும் பரவியது. உபநயனம் என்ற சடங்கும், முதல் மூன்று வர்ணத்தாருக்கு மட்டுந்தான் என்றும் ஆயிற்று. பிராமணர்களே புரோகிதராகவும், அரசர்களுக்கு மந்திரிமார்களாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்கள்தான் அரசனை அடக்கி ஆதிக்கஞ் செய்தார்கள்.
``டவுனுக்குத் தென்புறத்திலே ஓர் இடம் உண்டு. அதில்தான் மன்னரின் தர்பார் நடக்கும். அந்தக் கூட்டத்தில், சொக்கட்டான் நடப்பதுண்டு. முதல் மூன்று வருணத்தார் மட்டுந்தான் அங்கு விளையாட அனுமதிக்கப் படுவார்கள்.
கி.மு. 750 முதல் 320 வரை:
``இக்காலத்தில், மதம் மனித வாழ்வில் முக்கியஸ்தானம் பெறுகிறது என நினைத்து, அரசர்கள் புதிய மதங்களையும் உண்டாக்கி அரசாங்க வருமானத்துக்கு வகை தேடினார்கள். சந்நியாசிகள் அதிலும் பிராமண சந்நியாசிகள் மூலமாகத்தான், மோக்ஷம் கிடைக்குமென்ற புதிய கோட்பாடு உண்டானது. அதன் ஆரம்பந்தான், லிங்கம், சாளக்கிராமம் என்ற விக்ரக வணக்கமாகும். க்ஷத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ, பிராமணராகப் பிறக்காமல் மோக்ஷமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்த இக்காலத்தில்தான், க்ஷத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பவுத்தமும் எழும்பின.
``பவுத்தர்கள் எழுதிய பாலி பாஷையும், சமணர்கள் (ஜெயினர் என்றும் கூறுவது உண்டு) எழுதிய அர்த்த மகதி பாஷையும், சமஸ்கிருத பாஷைக்குப் பரம விரோதிகளாகும். (பாஷையிலுங்கூட ஆரியர்கள் - பவுத்த சமணத்தார்களுக்குப் பகைவர்கள் என்பது கவனிக்கத்தக்கது) புதிதாக எழுந்த பவுத்த சமண மதங்களால், பிராமணர்களுக்கு மதிப்புக் குறையத் தலைப்பட்டது.
கி.மு. 320 முதல் 230 வரை:
``இந்தியா பூராவும் மவுரிய அரசர்கள் ஆட்சி செலுத்தினாலும், தமிழர் இந்தியா மட்டும், அந்தச் சக்ரவர்த்திகளின் ஆதிபத்தியத்தில் வரவில்லை. மூவேந்தர்கள் ஆட்சியில் தமிழக வாணிபம், ஆரிய மயமாக்கப்பட வட இந்திய ராஜ்யங்களுடனும், மேற்கே பாரசீகம் (பெர்சியா) எகிப்து, அரேபியா, கிரீஸ் (தமிழில் யவனநாடு) ஆகிய தேசங்களுடனும், கிழக்கே பர்மா (சுவர்ணபூமி என்றுங் கூறுவர்) மலேயா, ஜாவா (சாவகம் என்றும் பெயர்) சுமத்திரா, சீனம், சீயம் (சயாம் என்பார்கள் ஆங்கிலத்தில்) ஆகிய தேசங்களுடனும் நடைபெற்றது.
``பின்னர், கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மன்னர்கள் அரண்மனைகளில், பிராமணர்கள் செல்வாக்கடைய ஆரம்பித்தார்கள். பிராமணர்களின் யாக முறைகளில் ஆசை பிறந்ததுடன், அவர்கள் உண்டாக்கிய சந்திர சூரிய அரச வம்சத்தில் தாங்களும் சம்பந்தப்படுத்திக்கொள்ளும் வேட்கையும் பிறந்தது, சேர,
சோழ,
பாண்டிய மன்னர்களுக்கு அகஸ்திய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் பாஷையைக் கற்றுக்கொண்டு, தமிழ்பாஷைக்கு அய்ந்திரசிஸ்டத்தில் சமஸ்கிருத இலக்கணத்தை உண்டாக்கினார்கள். அரசன் ஆரியக் கோட்பாட்டில் மயங்கினாலும் தமிழ்ப் பொதுமக்கள் ஆரிய மத சமூக வலையில் அகப்பட்டார்களில்லை.
கி.மு. 230 முதல் கி.பி. 300 வரை
``கி.பி.
150-இல் பிராகிருத மொழிபோய், சமஸ்கிருதம் அரசாங்க பாஷையாகியது. வடநாட்டில் இக்காலம், பல்லவர்கள் மாளவ தேசத்தை ஆண்ட சமயம், காஞ்சியை ஆண்ட ஆரியமயமாக்கப்பட்ட பல்லவர்களே கி.பி.
200-க்கு முன் தமிழ்நாட்டில் பிராகிருத மொழியை உத்தியோக பாஷையாக்கினார்கள். வட இந்தியாவில் இருந்த அரசியல் முறையைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ்அரசர்கள் ஆரியத்தைப் பின்பற்றி, இராஜசூய யாகம் முதலியன செய்ய ஆரம்பித்தனர். இராமாயணமும், பாரதமும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. மனுதர்ம சாஸ்திரம், வட இந்தியாவின் கீழ்ப்பகுதியில்தான் எழுதப்பட்டது! (இதனால், இம்மூன்று நூற்களும், அவைகளிற் பிறந்த கிளை நூற்களும், தமிழகத்துக்குப் புறம்பானவை என்பது பெறப்படுகிறது.)
கி.பி. 320 முதல் 600 வரை
``இக்காலத்தில் மத்திய இந்தியாவில், யசோதர்ம தேவன் என்ற பிராமணர் பிரக்யாதியாய் அரசாண்டார். இவரைக் கலியுக அவதாரரென்று அழைத்தனர். ஜெயினர்கள் (சமணர்), அவரை வெறுத்தனர். இஸ்லாம் ஆட்சி பரவிய பன்னிரண்டாம் நூற்றாண்டில்தான், இந்தக் கலியுக அவதாரக் கொள்கை உண்டாகியிருக்கிறது. நர்மதை - கிருஷ்ணா இரு நதிகளுக்கு மிடையே ஆண்ட வகாடகா வம்சத்தைச் சேர்ந்த ஹரிஷேணாவின் மந்திரிகள், மலபார் பிராமணர்களாய் இருந்தனர். இந்த நூற்றாண்டு களில்கூட வடநாட்டின் கோட்பாடு, பழக்கவழக்கங்கள் தமிழ்நாட்டில் ஆதிக்கஞ் செலுத்தவில்லை. பல நூற்றாண்டாக மூன்றாம் சங்கம் பாண்டிய மன்னர்களால் நடைபெற்றது. இவைகளினால் தமிழர் வாழ்க்கை, கி.மு.
5000 முதல் கி.பி.
400 வரை யாதொரு மாறுதலுமின்றி ஒரே படித்தரமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் இன்று இரைச்சலிடும் இந்துமகாசபைக்கு என்ன இலட்சியம் இருக்கிறது, இந்து ஆட்சியை ஏற்படுத்த? இந்துஸ்தானம் இந்துக்களுக்கே என்று கூற முடியுமானால் ஏற்படுத்தட்டும்!
சரி! செய்யட்டுமே அதனை! இந்துஸ்தான் இந்துக்களுக்கு ஏற்பட இந்துமகாசபை வேலை செய்யவேண்டுமானால், வைகை நதிக்கரையிலே ஏன் வரட்டுக் கூச்சலிட வேண்டும்? இந்துக்களுக்குத் திராவிட நாட்டில் என்ன வேலை?
இந்துஸ்தானத்திலே, இரதகஜ துரக பதாதிகளை, புண்யதீர்த்தப் புரோக்ஷணத்தை, பூவையர் பாடலை, ஆடலை,
அம்பு விடுவதைச் செய்வதைவிட்டு, இங்கு என்ன வேலை என்று கேட்கிறோம்?
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக